அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? டிமிக்கி கொடுக்கிறதா தமிழக அரசு?

0
71
#image_title

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? டிமிக்கி கொடுக்கிறதா தமிழக அரசு?

பண்டிகை காலங்களில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை தமிழக அரசு வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுமா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்து இருக்கிறது.

கொரோனவால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை காரணம் காட்டி 20 சதவீததில் இருந்து குறைத்து 10 சதவீதமாக கடந்த தீபாவளி பண்டிகையின் பொழுது போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரவுள்ள தீபாவளி பாண்டியகை முன்னிட்டு போனஸ் வழங்குவதில் எந்த ஒரு சமரசமும் இன்றி வழங்க வேண்டுமென்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இவர்களின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. குறிப்பாக போக்குவரத்து ஊழியர்களிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரை தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் தொமுச, சிஐடியு – ஏஐடியுசி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மனுவில் “அரசு போக்குவரத்து கழகங்கள், சிறப்பான செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கின்றன. போக்குவரத்து கழகங்களின் சிறந்த செயல்பாட்டிற்கு, தொழிலாளர்களின் மிக கடுமையான உழைப்பு மிக முக்கியமான காரணம்.. எனவே, போக்குவரத்து ஊழியர்களுக்கு நியாயமான முறையில், போனஸ் வழங்க வேண்டும். நீண்ட காலமாக, 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதும், மற்ற துறை ஊழியர்களை விட, போக்குவரத்து ஊழியர்கள் குறைவான ஊதியம் பெற்று வருகின்றனர்.

ஊதியத்தை அதிகப்படுத்தி கேட்கும் போதெல்லாம், 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக, அரசு சார்பில் காரணம் கூறப்பட்டது. இப்போது போனஸ் தொகையை குறைப்பது, எவ்விதத்திலும் நியாயமற்றது. எனவே, 2022- – 2023ம் ஆண்டிற்கான போனஸாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். போனஸ் கணக்கிடும்போது குறைந்தபட்ச கூலி சட்ட அடிப்படையிலான சம்பளத்தை கணக்கிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

போக்குவரத்து சங்கத்திடம் இருந்து கோரிக்கை வலுத்து வருவதால் வேறு வழியின்றி தமிழக அரசு அவர்களிடம் பேச்சு வாரத்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 4% அகவிலைப்படி உயர்வு குறித்தும் தமிழக அரசு இதுவரை மூச்சு விடாமல் கப்சிப் என்று இருப்பதினால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு குறித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது போக்குவரத்து துறை போனஸ், ஊதிய உயர்வு குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா? அதேபோல் போக்குவரத்து துறை ஊழியர்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.