தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!

0
95
#image_title

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!

 

தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.

 

2022-2023ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டது. கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறையில் மாணவ மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றதையும் கல்வித்துறை வெளியிட்டது.

 

இதையடுத்து விடுமுறை முடிந்து 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் மே மாதத்தின் இறுதியில் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதியை பள்ளிக் கல்வித்துறை தள்ளி வைத்தது. இதையடுத்து ஜூன் 7ம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது.

 

ஆனாலும் கோடை வெயிலின் தாக்கம் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருந்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதை கருத்தில் கொண்டு ஜூன் 7ம் தேதி திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள் திறப்பு 2வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். மாணவிகளுக்கு இனிப்பும் மலரும் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.