அக். 15 முதல் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: மத்திய அரசு!

0
71

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. அந்தவகையில், தற்போது 5ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனினும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களே இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:

  • பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டும்.
  • மாணவர்கள் பாடங்களை கற்க பள்ளிக்கு நேரடியாக வருவதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  • மாணவர்களின் வருகைப்பதிவில் கண்டிப்பு கூடாது. நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வருகைப்பதிவும், நோய்க்கான விடுப்பு கொள்கைகளையும் வகுக்க வேண்டும்.
  • வீட்டுப் பள்ளியில் இருந்து முறையான பள்ளிப் படிப்புக்கு மாணவர்களை மென்மையான முறையில் மாற்றிக் கொண்டுவருவதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • என்சிஇஆர்டி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்குவது அவசியம்.
  • மாற்றி அமைக்கப்பட்ட பள்ளி கால அட்டவணை, மாற்று கல்வி திட்டம், மாற்று வகுப்புகள், பள்ளி திரும்பும் விழிப்புணர்வு பிரசாரங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிகள் மேற்கொள்ளலாம்.
  • பள்ளிகள் தங்களின் வகுப்பறைகள், நூலகங்கள், தண்ணீர் தொட்டிகள், பள்ளி வளாகம், கழிப்பறைகள் என அனைத்து பகுதிகளிலும் மற்றும் அனைத்து உபகரணங்களையும் முறையாக கிருமி நாசினிக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். உள்ளரங்குகளில் சுத்தமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளிகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • தனிமனித இடைவெளி போன்ற பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பலகைகள், பேனர்களை வாய்ப்புள்ள இடங்களில் வைக்க வேண்டும்.
  • பள்ளியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வீட்டிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்.
  • பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக உள்ளூர் தேவைகளின்படி, தங்களுக்கென நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.
  • மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு பள்ளிகள் தங்களுக்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு எந்த ஒரு நிலையான முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Parthipan K