பருவ மழை பாதிப்பு! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்! பயணத்திட்ட விவரங்கள் இதோ!

0
100

பருவமழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் வெகுவான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து புதுவைக்கு புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை 7.30 மணியளவில் கடலூரில் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார்.

முதலில் கடலூர் மாவட்டம் கீழ் பூவாணி குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் அறுவாமூக்கு திட்டம் தொடர்பான விளக்கப் படத்தை பார்வையிட உள்ளார். தொடர்ந்து சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களுடைய வீடுகளையும் முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிடுகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்குச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், உமையாள் பதி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிகிறது.

அதன் பிறகு அதே பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களையும் பார்வையிடுகிறார். இதனை அடுத்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்த பணிகள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு அதன் பிறகு சாலை மார்க்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.