அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

0
124
#image_title

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 51).இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்கு உறவினர் சந்திரன் என்பவர் மூலமாக மயிலாடுதுறை அவையம்பாள்புரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கணேசன் மகன் விஜயன் (வயது 42) என்பவரை சந்தித்துள்ளார்.

விஜயன் தனக்கு முக்கிய அரசு அதிகாரிகளிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சின்னப்பன் மகனுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பிய சின்னப்பன் கடந்த 2021- ஆம் ஆண்டு விஜயனிடம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட விஜயன் 2 ஆண்டுகளை கடந்தும் வேலை வாங்கி தராததால் அதிர்ச்சி அடைந்த சின்னப்பன் வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை கொடுத்த பணத்தை திரும்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பி தராததால் சந்தேகம் அடைந்த சின்னப்பன், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், விசாரணை மேற்கொண்டார். மோசடி செய்ததை உறுதி செய்த போலீசார் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட விஜயனை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடி வழக்கு தொடர்பாக பூம்புகாரைச் சேர்ந்த சந்திரன் என்பவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

author avatar
Savitha