எம்எல்ஏவிடமே கைவரிசை காட்டிய தம்பதிகள் அதிரடி கைது!

0
66

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ் சந்திரன் இவரை கைபேசியில் தொடர்பு கொண்டு சில மர்ம நபர்கள் நான் தலைமைச் செயலகத்திலிருந்து உள்துறை டிஎஸ்பி பேசுகின்றேன் உங்கள் தொகுதி தொடர்பாக ஒரு புகார் வந்திருக்கிறது. அதை நான் சரி செய்ய 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு இது போன்ற பிரச்சினையை விளாத்திகுளம் சட்டசபை உறுப்பினருக்கும் உண்டானது, அதனை நான் சரி செய்து தந்தேன் அவர் 25 லட்சம் ரூபாய் வழங்கினார். அதேபோல நீங்களும் இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள் பணத்தை நான் சொல்லும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து இணைப்பைத் துண்டித்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சட்டசபை உறுப்பினர் சந்திரன் விளாத்திகுளம் சட்டசபை உறுப்பினரை தொடர்புகொண்டு கேட்டபோது தன்னிடமும் ஒரு நபர் பணம் கேட்டார் ஆனால் என்னுடைய தொகுதி பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அழைப்பை துண்டித்ததாக கூறினார்.

அதன்பிறகு சந்திரன் மறுபடியும் அந்த நபரை தொடர்பு கொண்டபோது தான் திருத்தணியில் தனியார் ஓட்டல் அருகே கருப்பு நிற காரில் வருகின்றேன் அங்கு வந்து பணத்தை வழங்குமாறு கூறி இருக்கிறார். இது தொடர்பாக சந்திரன் வழங்கிய புகாரின்பேரில் திருத்தணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் கூறிய ஓட்டல் அருகே மறைந்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது அங்கு கருப்பு நிற காரில் வந்து இறங்கிய சென்னை அம்பத்தூரை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவி யசோதா உள்ளிட்டோரிடம் சட்டசபை உறுப்பினரின் உதவியாளர் சதீஷ் ரூபாய் நோட்டுக்களை வைத்து கொடுத்தார்.

அதனை யசோதா வாங்க முயற்சி செய்த போது அங்கே மறைந்திருந்த காவல்துறை அதிகாரிகள் கணவன், மனைவி உள்ளிட்ட இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து போலியான அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், 2 கைபேசிகள், கார் மற்றும் 10 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றினார்கள் கைதான இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.