தமிழக வேளாண் பட்ஜெட் கேலி செய்ய வேண்டாம்! வேளாண் அமைச்சர் வேண்டுகோள்

0
158
#image_title
தமிழக வேளாண் பட்ஜெட் கேலி செய்ய வேண்டாம்! வேளாண் அமைச்சர் வேண்டுகோள்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில், வேளாண்மை துறை சம்பந்தமான ஏராளாமான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் எம் ஆர் கே பன்னிர்செல்வமும் சட்டமன்றத்தில் வெளியிட்டு பேசி வந்தனர்.
இந்த நிலையில் பட்ஜெட் குறித்த மானிய கோரிக்கை மீதான விவாத கூட்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்ட தொடர் குறித்து அத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
கடந்த 3 வருடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமலும் அறிந்து கொள்ளாமலும், 300 கோடி மதிப்பீட்டில் வெறும் தென்னங்கன்று மட்டும் வழங்கியதாக கூறுவது திட்டத்தின் தனித்தன்மையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களின் பிதற்றலாகும்.
திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவு பூங்கா அமைப்பதென்பது இன்று விதைத்து நாளை முளைக்கும் செயல் அல்ல. இந்த திட்டங்களை  விரைவாக செயல்படுத்தும் வகையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இதுபோன்ற திட்டங்கள் செயல்வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும்போது தான் முழு பலனும் விவசாயிகளுக்கு சென்று சேரும்.
வேளாண் நிதிநிலை அறிக்கைகளை படித்து பல தரப்பட்ட விவசாயிகளும், அறிஞர்களும் பாராட்டி வருகின்றனர். விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துகள் ஏதும் இருந்தால் அதனை அரசுக்கு தெரியப்படுத்தினால் அதனை வரவேற்க இந்த அரசு எப்போதும் தயாராக உள்ளது.
வெறும் வாயில் வடை சுடும் பட்ஜெட் என்று கூறுவது வேளாண்மையை பற்றி சற்றும் தெரியாமல் பட்ஜெட் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பேசுபவர்களின் கருத்தாக இருக்கலாம்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பவர்கள் வெளியிட்ட கருத்தாகும். முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.
கூட்டத்திற்கு வருகை புரிந்த பி ஆர் பாண்டியன் எந்தவித ஆக்கப்பூர்வமான கருத்தினை தெரிவிக்காமல் இருந்துவிட்டு அல்லது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாத நிலையில், விவசாயமே பார்க்காத நபர் ஒருவர் தற்பொழுது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.