மாமன்னன் படத்தில் நினைத்தது ஒன்று நடந்தது வேறு! அப்செட்டில் மாரி செல்வராஜ்

0
82
Fahadh Faasil
Fahadh Faasil

மாமன்னன் படத்தில் நினைத்தது ஒன்று நடந்தது வேறு! அப்செட்டில் மாரி செல்வராஜ்

 

கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் வடிவேல்,கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சமூகநீதியை பேசும் ஒரு அரசியல் கட்சியில் நிலவும் சாதிய பாகுபாட்டை மையக் கருத்தாக கொண்டே இந்த படமானது எடுக்கப்பட்டிருக்கும்.

 

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே சாதி அடிப்படையிலான திரைப்படங்கள் வெளியாவது அதிகரித்து கொண்டே செல்கிறது.அதாவது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி திரைப்படம் முதல் தற்போது வெளியான மாமன்னன் வரை பல்வேறு கால கட்டங்களில் குறிப்பிட்ட இயக்குநர்களால் தொடர்ந்து ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகி விட்டது.அதில் குறிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் இது போன்ற படங்களை தான் எடுப்பேன் என்று தெளிவாகவே சில பேட்டிகளில் கூறியுள்ளார்.

 

அந்த வகையில் இந்த மாமன்னன் திரைப்படமும் அவ்வாறே அமைந்திருந்தது.படம் வெளியாகும் முன்பே இந்த திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகள் ஆரம்பிக்கும் சமயத்தில் நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் விமர்சித்து பேசி சர்ச்சையை கிளப்பினார்.இதனைத்தொடர்ந்து தியேட்டரில் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்து படத்திற்கு நல்ல வரவேற்பை அளித்தனர்.

 

இந்நிலையில் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பியது போலவே படம் வெளியான பிறகும் சில சர்ச்சைகள் எழுந்தன. அதாவது சமூக ஏற்றத் தாழ்வுகளை பேசும் இந்த படத்தில் சில நிகழ்கால அரசியல் தலைவர்களை அடையாளப்படுத்தியிருந்ததால் இது அப்போது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அதாவது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான மாமன்னன் தோற்றத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சிறப்பாக நடித்திருப்பார்.இந்த மாமன்னன் கேரக்டர் முன்னாள் சபாநாயகர் தனபாலை குறிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. அதே போல நெகடிவ் கேரக்டராக வரும் ரத்தினவேல் கவுண்டர் கதாபாத்திரம் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த அரசியல் தலைவரை குறிக்கும் வகையிலும் இருந்ததாகவும் அப்போது பேசப்பட்டது.

 

அடுத்து கட்டை சேர் போட்டு வேட்பாளரை உட்கார வைக்கும் காட்சியானது விசிக தலைவர் திருமாவளவனை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் அப்போது பேசப்பட்டது.இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுப்பதாக கூறிக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை கொடூர வில்லன்கள் போல சித்தரித்து அதற்கான அடையாளங்களையும் காட்சிகளில் வைப்பது இவரின் வழக்கமாகி விட்டது.

 

அந்த வகையில் திட்டமிட்ட இவர் இந்தப் படத்தில் வரும் பகத் பாசில் நடித்த ரத்தினவேல் கேரக்டரை கொடூர வில்லனாக காட்டுவதாக நினைத்து ஒரு மாஸான ஹீரோ போல காட்டியிருக்கிறார் என்பது படம் வெளியான போதே பேசப்பட்டது. இது குறித்து அப்போதே சமூக வலைத்தளங்களில் பலரும் பேசியிருந்தார்கள்.

 

இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி OTT தளத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நெட் பிளிக்ஸ் OTT தளத்திலும் இது டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தான் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட நினைத்து பார்க்காத அளவுக்கு ஏற்கனவே குறிப்பிட்ட அந்த ரத்தினவேல் என்ற நெகடிவ் கேரக்டரை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

 

வழக்கமாக பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் எடுக்கும் திரைப்படங்களில் காட்டப்படும் எதிர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அந்த படத்துக்கு எதிர்ப்பை தெரிவித்து வருவது வழக்கமானது. ஆனால் இந்த முறை வித்தியாசமான செயலில் ஈடுபட்டு இயக்குனருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளனர்.

 

ஒவ்வொருவரும் நெகடிவ் கேரக்டரில் வரும் பகத் பாசில் காட்சிகளை இணைத்து தாங்கள் சார்ந்த சமுதாய பாடல்களை எடிட்டிங் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பொருந்தும் வகையில் காட்சிகள் இருப்பதால் எல்லா தரப்பு மக்களும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாகி வருகிறது. ஹீரோ உதயநிதி ஸ்டாலினா அல்லது பகத் பாசிலா என்று யோசிக்கும் வகையில் டிரெண்ட் ஆகி வருகிறது.

 

அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமத்துவம் பேசுவதாக கூறிக் கொண்டு நெகடிவ் கேரக்டரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அடையாளமாக காட்ட நினைத்த இயக்குனர் மாரி செல்வராஜின் நோக்கம் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.இதனால் அடுத்த படத்தில் நெகடிவ் கேரக்டரில் யாரை போட்டாலும் அவரையும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுவார்கள் என்ற அச்சத்தில் மாரி செல்வராஜ் அப்செட் ஆகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.