பரிசு விழுந்ததாக கூறி பல பேரிடம் பண மோசடி! பொது மக்களுக்கு எச்சரிக்கை! 

0
195

பரிசு விழுந்ததாக கூறி பல பேரிடம் பண மோசடி! பொது மக்களுக்கு எச்சரிக்கை! 

திருநெல்வேலி மாவட்டத்தில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த செல்போன் கடைக்காரரும் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து அடுத்த தென்கலம் பகுதியில் சிலர் ஒரு கம்பெனியின் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அந்த கம்பெனியின் சோப்பை வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று கூறி மக்களிடம் செல்போன் நம்பர் மற்றும் முகவரியை பெற்றுச் சென்றுள்ளனர்.

பின்னர் சில நாட்கள் கழித்து பொதுமக்களுக்கு சோப்பு கம்பெனியின் மேலாளர் பேசுவது போல் இணைப்பு வந்துள்ளது. அதில் உங்களுக்கு தங்க காசு, டிவி, மற்றும் மோட்டார் சைக்கிள் பரிசாக விழுந்துள்ளது இதனை நீங்கள் பெற வேண்டுமானால் வரியாக ரூ. 36 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பி நிறைய மக்கள் தங்கள் பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் ராஜு,  இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் மோசடியில் ஈடுபட்டதாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் பகுதியை சார்ந்த அய்யனார், காளீஸ்வரன், இசக்கிமுத்து ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த மோசடிக்காக கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சார்ந்த தங்கராஜ் என்ற செல்போன் கடைக்காரரிடம் போன், சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. தங்கராஜும் தனது கடையில் செல்போன், சிம்கார்ட் வாங்க வருபவர்களின்,  புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி நூறுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை தவறான வழியில் விற்று இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரையும் கைது செய்த போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.