கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது!

0
224
Durai Murugan (துரைமுருகன்)
Durai Murugan (துரைமுருகன்)

கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது!

அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அ.தி.மு.க ஐ.டி நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 29.03.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும்’’ என்று உருக்கமாகப் பேசினார். அமைச்சர் துரைமுருகன் பேசிய இந்த வார்த்தைகளை திரித்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் சமூக வலைதளங்களில் வரம்பு மீறி கடுமையாக விமர்சித்தனர்.

அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகியான பொள்ளாச்சி அருண்குமார் என்பவர், துரைமுருகன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து தனது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு வைரலான நிலையில், தி.மு.க தரப்பில் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை இன்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக, வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘சில விஷக்கிருமிகள், அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ஒரு கல்லறையில் இருப்பதைப் போன்று சித்தரித்து, சில வாசகங்களையும் குறிப்பிட்டு, அதனுடன் ஆடியோவையும் இணைத்து வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு வதந்தி பரப்பி பிரச்னையை ஏற்படுத்தும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காட்பாடி தி.மு.க வடக்கு பகுதிச் செயலாளர் வன்னியராஜா 01-04-2023 அன்று புகார் மனு அளித்துள்ளார். இப்புகார் மனுவானது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இவ்வழக்கில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அ.தி.மு.க தகவல் தொழில் நுட்பப் பிரிவு 20-வது அணி செயலாளர் பொள்ளாச்சி அருண்குமாரை விசாரித்தபோது, அவர்தான் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை டுவிட்டரில் இருந்து பதிவிறக்கம் செய்து, தவறாக சித்தரித்து பதிவேற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். எனவே, பொள்ளாச்சி அருண்குமாரை காட்பாடி நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்ப்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் துரைமுருகன் பற்றிய தவறான பதிவேற்றங்கள் முகநூல் பக்கங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.