மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலாளர்!

0
93

தமிழ்நாட்டில் நோய்தொற்றுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது தற்சமயம் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பலவிதமான நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எல்லா மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய ஒரு கடிதத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏ டி எஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. டெங்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் உயிரிழப்பு அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கண் வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, எலும்பு வலி, தடிப்புகள், மூட்டு வலி, சோர்வு உள்ளிட்டவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கின்றன என தெரிவித்திருக்கிறார்.

இந்த நோயிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், கொசுக்கள் உற்பத்தி இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், மழைக்காலங்களில் உண்டாகும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும், அடுத்த இரண்டு மாதங்கள் சுகாதாரத்துறைக்கு சவாலானதாக இருக்கும். ஆகவே நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

அத்துடன் முதல் தவணை நோய்தொற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மாவட்ட ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது அந்த கடிதத்தில்.