கவலைப்படாமல் இருங்கள் அதிமுக தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலா! எதற்காக தெரியுமா?

0
75

சசிகலா அதிமுக தொண்டர்கள் இடையே உரையாற்றும் ஆடியோ வெளியாகி தமிழக அரசியல் களத்தில் தினமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாற்றி வரும் சசிகலா தன்னுடைய கருத்துக்களை மிக உறுதியாக தெரிவித்து வருகிறார். தேர்தல் முடிவுற்று திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கின்ற சூழலில் அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் சசிகலா செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆடியோ விவகாரம் அதிமுக தலைமையை சற்று கலங்கவைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சிதம்பரம் என்ற அதிமுக தொண்டர் இடம் உரையாடிய சசிகலா நோய் தொற்று பரவல் முழுவதுமாக முற்று பெறட்டும் கட்டாயம் நான் வருவேன். கட்சி இப்போது வேறு விதமாக போய்க்கொண்டிருக்கிறது. விரைவாக நான் வந்து கட்சியை காப்பாற்றுவேன். நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை அதிமுக பெற்றிருக்கிறது.

ஆனால் இன்று நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழந்து இருக்கின்றோம் தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தவறான முடிவுகளால் வேறு கட்சிக்கு தாரைவார்த்து கொடுத்திருக்கிறோம் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் என்னுடன் என்னுடைய தலைமையில் ஒற்றுமையாக இருந்திருந்தால் நிச்சயமாக மறுபடியும் ஆட்சியை பிடித்து இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுந்தர் என்பவரிடம் உரையாற்றிய சசிகலா சேலத்தில் நம்முடைய கட்சியை சார்ந்தவர்கள் சுயமாக செயல்பட்டு வருகிறார்கள். கவலைப்படாமல் இருங்கள் நான் அனைத்தையும் சரி செய்வேன் என்று ஆறுதலாக தெரிவித்திருக்கின்றார்..

அத்தோடு சசிகலாவுடன் உரையாடும் அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அந்த விதத்தில் இதுவரையில் அதிமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்தது தான்.