தமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்!

0
270
#image_title

தமிழக IAS அதிகாரி கதிரவன் மாரடைப்பால் மரணம்!

தமிழக்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கதிரவன் சென்னையில் அலுவலகத்திற்கு தயாராகும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

சமீபத்தில் 11 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் சேலத்தில் உள்ள தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்த கதிரவனும் ஒருவர். அவர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். சில நாட்கள் விடுமுறையில் இருந்த அவர் நேற்று காலையில் புதிய அலுவலகத்திற்கு வந்து பதவி ஏற்க இருந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்த அவரின் வீட்டில் நேற்று யாரும் இல்லை. புதிய அலுவலகத்திற்கு செல்வதற்காக நேற்று அவர் கார் டிரைவரை அழைத்துள்ளார். காரில் காத்திருந்த டிரைவர், மிகவும் தாமதமானதால், கதிரவனை செல்போனில் அழைத்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனையடுத்து டிரைவர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரவன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்த்து

உடனே அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி கதிரவன் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல், இறுதிச் சடங்குகளுக்கு சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த காந்திபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வேளாண்மை அதிகாரியாக 12.9.1996-ம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த இவர் தர்மபுரி மாவட்டத்தில் பயிற்சி துணை கலெக்டராக 2002ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட பல்வேறு அரசு பணியில் பணியாற்றியுள்ளார். கதிரவன் 2013 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். அதன் பின்னர் சேலம் மாவட்ட ஆவின் பொது மேலாளர், மதுரை மாநகராட்சி கமிஷனர், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். அவருக்கு வயது 52.

 

author avatar
Parthipan K