உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்!

0
67

உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் வெளியேற்றம்!

உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வாரங்களாக போர் தொடுத்து வருகிறது. போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து, போரை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்காமல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன.

ரஷியா தனது தீவிர தாக்குதலால் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. தற்போது உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷியாவின் இந்த தீவிர தாக்குதலின் காரணமாக பல லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரஷிய படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  உக்ரைனில் இருந்து  17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் சுமி நகரில் 694 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து சுமியில் உள்ள இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக ரஷிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பாதுகாப்பான பாதையை உருவாக்கினர்.

இதையடுத்து, நேற்று காலை 12 பேருந்துகள் மூலம் சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். முன்னதாக சுமியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம் குறித்த செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங், 694 இந்திய மாணவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேருந்துகளில் பொல்டாவாவுக்கு புறப்பட்டதாக தெரிவித்தார்.

author avatar
Parthipan K