ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி!

0
82

ஆசியக் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா உறுதி!

அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களில் விற்றுத்தீர்ந்தன.

இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு அனுமதி அளித்தால் பாகிஸ்தான் செல்ல தயாராக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால் இப்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “இந்திய அணி ஆசியக் கோப்பை விளையாட பாகிஸ்தான் செல்லாது” என்று கூறியுள்ளார். மேலும் தொடர் வேறு பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் 50 ஓவர் போட்டியாக நடக்க உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்திய அணி 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பைக்காகதான் கடைசியாக பாகிஸ்தான் சென்று விளையாடியது.