தமிழர்களின் ஆட்டமாக இருந்து அரசியல் ஆட்டமாக மாறும் ஜல்லிக்கட்டு!

0
211
#image_title

தமிழர்களின் ஆட்டமாக இருந்து அரசியல் ஆட்டமாக மாறும் ஜல்லிக்கட்டு!

தமிழர்களின் மரபு வழி விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு தற்போது அரசியல் ஆதிக்கத்தால் புதைந்து வருகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் வெகுவிமர்சையாக மக்களால் நடத்தப்பட்டு மக்களால் கொண்டாடப்படும் போட்டித் திருவிழாவாகும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக மக்களால் கொண்டாடப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு, அரசியல் மயமாக்கப்பட்டு வருவதையும், வணிக மயமாக்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மக்கள் தன்னெழுச்சியாக மெரினாவில் ஏற்படுத்திய புரட்சியே ஜல்லிக்கட்டு போராட்டம். இது உலக வரலாற்றையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழர்கள் மொழிக்காகவும், கலாச்சாரத்திற்காவும், தங்கள் உரிமைக்காகவும் தன்னெழுச்சியாக ஒன்று சேரக்கூடியவர்கள் என்பதை அந்த போராட்டம் நிரூபித்தது.

ஆனால் அதன் பிறகு ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு என்றும் பாரம்பரியம் என்றும் ஹைப் ஏற்றி இன்று அரசியல் சார்ந்தும் வணிகம் சார்ந்தும் வளர்ந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு தங்கள் உரிமை என போராடிய மக்கள் இன்று அதே ஜல்லிக்கட்டில் அந்நியப்படுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகிறது.

ஜல்லிக்கட்டில் முன்பிருந்த காளை வழிபாட்டு முறை, மாடு வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான உரிமைகள், உள்ளூர் வீரர்களுக்கான பங்களிப்பு என அனைத்தும் வி.ஐ.பி சிபாரிசு, ஆன்லைன் பதிவுகள், அரசியல் அதிகாரங்கள், டோக்கன் விற்பனை என மாறி உள்ளதே தவிர ஜாதிய ஆதிக்கங்கள் இன்னும் குறையவில்லை. அதற்கு மாறாக அரசியல் தலையீடுகள்தான் அதிகரித்த வண்ணம் உள்ளது.

முன்னதாக ஜல்லிக்கட்டு என்றால் வருடத்திற்கு ஒருமுறை ஊர் பொதுமக்களால் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று முறையாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அரசியலாளர்களின் முன்னெடுப்பால் வருடத்திற்கு ஐந்து முறை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு அரசியலாக்கப்பட்டே வருகிறது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏ- க்கள் போன்ற அரசியலாளர்களின் தலையீடுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

உதாரணமாக இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மிகத் திறமையாக விளையாடி அதிக மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தர் என்ற இளைஞர் வலுக்கட்டாயமாக இரண்டாம் ஆட்டத்தில் வெளியேற்றப்பட்டார். ஒருவரே வருகிற பெரும்பாலான மாடுகளை பிடிக்கும் போது இவ்வாறு இரண்டாவது ஆட்டத்தில் வெளியேற்றப்பட்டு கடைசி சுற்றுக்கு அனுமதிக்கபடுவார் என்பது விதியாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்த விதி இவரைப் போன்றே அதிக மாடுகளை பிடித்த கார்த்திக் விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. அந்த கார்த்திக் என்பவர் அமைச்சர் மூர்த்தின் சொந்த தொகுதிகுட்பட்டவர். அவருக்கு அமைச்சரால் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது என அபிசித்தர் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பல இடங்களில் இதே போன்ற குறுக்கீடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இவை தவிர, ஜல்லிக் கட்டு நடைபெறும் ஒரு சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களும், அவர்களின் காளைகளும் பங்கெடுப்பதை தடுப்பதும் அரங்கேறியுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக கார்ப்பரேட்டுக்கும், அரசாங்கத்திற்கும் நல்வழிப்படுத்தும் வகையில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள
ஜல்லிக்கட்டு
அரங்கில் வரும் 24-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இப்படியாக அரசியலில் புதைந்திருக்கும் ஜல்லிக்கட்டு மீண்டும் மக்கள் கையில் மீட்டெடுக்கப்படுமா? மேலும் ஜல்லிக்கட்டு உரிமைக்காக ஒன்று திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மக்கள் தங்கள் உரிமைக்காக ஒன்று திரள ஒரு நிமிடம் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha