டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சமாளிக்க வெங்காய அரசியலை கையிலெடுத்த மத்திய அரசு!
விரைவில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் சூழ்நிலையில் எப்படியாவது மக்களைக் கவர்ந்து அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைமையிலான மத்திய அரசு களத்தில் இறங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு மத்திய அரசே நேரடியாக இறங்கி விற்பனை செய்வதால் இதை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி போன்ற பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு வரும் வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளி விவரங்கள் படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.80 எனவும், மும்பையில் ரூ.70 எனவும், கொல்கத்தாவில் ரூ.50 எனவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 எனவும் விற்கப்படுகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 வரை மட்டுமே விற்பனையான நிலையில், திடீரென ரூ.80 வரை உயர்ந்துள்ளது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கிடயே டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் “ டெல்லி அரசு வெங்காயம் கொள்முதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனையடுத்து அடுத்த 10 நாட்களில் மக்களுக்கு வெங்காயம் கிலோ ரூ.24க்கு வழங்கப்படும். நியாய விலைக் கடைகளிலும், வீடுகளுக்கே சென்றும் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு டெல்லி மக்களைக் கவரும் வகையில் மத்திய அரசே வெங்காயத்தை டெல்லி அரசு அறிவித்த விலையைக் காட்டிலும் 2 ரூபாய் குறைவாக நேரிடையாக விற்பனை செய்து வருகிறது.
இதனையடுத்து மத்திய அரசின் நியாய விலைக்கடை நடமாடும் வாகனங்கள் மூலமாக இந்த விற்பனையை மத்திய அரசு நேரடியாக தொடங்கியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இதனால் மத்திய அரசின் இந்த வேகத்தை பார்த்து ஆம் ஆத்மி கட்சியினர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.
வெளிச்சந்தையில் கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்பனையாகும் நிலையில் மத்திய அரசு ரூ 22 க்கு விற்பதை மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த திட்டத்துக்கு மாற்றாக அதை சமாளிக்கும் விதமாக, மத்திய அரசு அதிரடியாக களமிறங்கி மக்களின் செல்வாக்கை பெற்று வருகிறது.
அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தேர்தல் ஆட்டம் ஆரம்பம்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும், உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை, அக்., 15க்குள் இடமாற்றம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன், எடுத்து வருகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
3 ஆண்டுகளுக்கு மேல்அடுத்த கட்டமாக, சொந்த மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அதிகாரிகள் ஆகியோரை இடமாற்றம் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் கமிஷனர் பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
இடமாற்ற உத்தரவு, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, காவல் துறையில், எஸ்.ஐ., முதல், ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வரை பொருந்தும்.
காவல் துறையில், தனிப்பிரிவு, பயிற்சி, கம்ப்யூட்டர் பிரிவில் பணிபுரிவோருக்கு, இவ்விதி பொருந்தாது. மாநில அளவிலான அதிகாரிகளுக்கு, இடமாற்றம் பொருந்தாது.
தேர்தல் பணியின்போது, தண்டனைக்குள்ளானோரை, தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. ஆறு மாதங்களுக்குள், ஓய்வு பெற உள்ள அதிகாரிகளை, இடமாற்றம் செய்ய வேண்டியதில்லை.
தேர்தல் பணிக்கு அவசியம் என, கருதப்படும் அலுவலர்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிந்திருந்தால், அவர்கள் அப்பணியில் தொடர, மாநில தேர்தல் ஆணையத்தில், அனுமதி பெற வேண்டும். இடமாற்றம் பணிகளை, அக்., 15க்குள் முடிக்க வேண்டும்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை கதிகலங்க வைக்கும் பாமக மற்றும் அதிமுக கூட்டணி
தமிழகத்தில் நாங்குநேரி,விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக சார்பில் இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் விருப்பமனு அளித்திருந்தனர். இதில் விக்கிரவாண்டி தொகுதியை போட்டியிடுவதற்காக திமுக சார்பாக புகழேந்தியை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.அதிமுக சார்பில் இன்னும் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை.
விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டுமென்றால் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரை தான் அங்கு நிறுத்தியாக வேண்டும்.
விழுப்புரத்தை பொறுத்தவரை, திமுகவில் பொன்முடி, அதிமுகவில் அமைச்சர் சி.வி சண்முகம் என இருவரும் மக்களுடன் நல்ல செல்வாக்கை பெற்றவர்கள். இவர்களை போலவே செல்வாக்கு பெற்றவர் தான் அதிமுகவின் முன்னாள் எம்.பி லட்சுமணன். இவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதிமுகவிலிருந்து பிரிந்த போது அவருடைய அணியில் இணைந்து அதிமுகவை உடைத்ததில் பெரும் பங்கு இவருக்கும் உள்ளது. அதாவது ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் என்றே சொல்லலாம். கடந்த முறை எம்.பி தேர்தலிலேயே இவர் தனக்கு வாய்ப்பு கேட்டிருந்திருக்கிறார். ஆனால் அது சி.வி.சண்முகத்தின் தலையீட்டால் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். இந்நிலையில் இந்த முறை எப்படியாவது இடைத்தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்று விருப்பமாக இருக்கிறார் என்கிறார்கள்.ஓபிஎஸ் ஆதரவாளரான இவருக்கு சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தாலும் மற்றொரு புறம் அமைச்சர் சி.வி. சண்முகம் தன்னுடைய அண்ணன் ராதாகிருஷ்ணனை இங்கு நிறுத்த வெகு ஆர்வமாக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
திமுக எம்எல்ஏ மறைந்த உடனேயே, எப்படியும் தன் அண்ணனை இங்கு தான் நிறுத்தியாக வேண்டும் என என்று முடிவு செய்து, அதற்கான பூத் ஏஜென்ட் கவனிப்பு வேலைகளிலும் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. காரணம் இங்கு அதிமுக, திமுகவிற்கு இணையாக பாமக பலமான வாக்கு வங்கியை வைத்துள்ளது.
இந்த தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ மறைந்தது முதலே எப்படியும் தன் அண்ணனை இங்கு தான் நிறுத்தியாக வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான அனைத்து செயல்பாடுகளும் சி.வி.சண்முகம் சார்பாக செய்யப்பட்டு வருகிறது என்கிறார்கள். இவ்வளவு ஈடுபாட்டிற்கு காரணம் இங்கு அதிமுக, திமுகவிற்கு இணையாக தற்போது அதிமுக கூட்டணியிலுள்ள பாமக பலமான வாக்கு வங்கியை வைத்துள்ளது.
வன்னியரான சி.வி.சண்முகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவின் வாக்குகள் அப்படியே கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இதையெல்லாம் மனதில் வைத்து தான் எப்படியாவது தனது அண்ணனை களமிறக்க வேண்டும் என பிளான் போட்டு வந்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம். ஆனால், அவருடைய மகனுக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் ஆர்வமில்லை என்று சொல்லிவிட்டார் என்கிறார்கள். அவரது அண்ணன் நிறக்கவில்லை என்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளே புகுந்து விடலாம் என வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது.இந்த விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் மொத்த அதிகாரத்தையும் அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் எடப்பாடி பழனிசாமி வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.
அதனால், தற்போது அமைச்சர் சி.வி சண்முகம் மனசு வைத்தால் இந்த தொகுதியில் யார் நின்றாலும் சர்வ சாதாரணமாகவே வெற்றி பெற்று விடலாம் என்பதால் அதிமுகவினர் பலரும் விக்கிரவாண்டிக்காக போட்டி போட்டு வருகின்றனர்.
இதற்கான முழுமையான காரணம் விழுப்புரத்தில் தனி செல்வாக்குடன் வலம் வருபவர் தான் இந்த சி.வி சண்முகம்.இவர் கடந்த காலங்களில் நடந்த 2001, 2006 என இரண்டு முறை திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். விழுப்புரம் திமுகவின் கோட்டை என பெருமைப்பட்டு கொண்டிருந்த திமுகவின் அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியை 2011 இல் நடந்த தேர்தலில் சி.வி.சண்முகம் மண்ணைக் கவ்வ வைத்தார். அடுத்து அவரை 2016 தேர்தலில் திருக்கோவிலூருக்கு துரத்திய பெருமையும் அமைச்சர் சி.வி.சண்முகத்தையே சாரும். இவ்வாறு இவர் களத்தில் இருந்தால் எதிரி காலி என்னும் அளவிற்கு இந்த பகுதியில் அவருக்கு செல்வாக்கு உள்ளது.மேலும் இது பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் சொந்த ஊர் என்பதாலும்,கடந்த தேர்தலில் தனியாக போட்டியிட்டே 41000 வாக்குகளுக்கு மேல் பாமக பெற்றுள்ளது என்பதாலும் அதிமுகவின் வெற்றியை இது உறுதி செய்கிறது.அதனால் இவ்வளவு வெற்றி வாய்ப்புள்ள விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
மறுபுறம் தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவரும் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், பண விஷயத்தில் சிவி சண்முகத்தை சமாளிக்க கூடியவராக இருப்பதாலும் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்தை விக்கிரவாண்டியில் நிறுத்தினால் நல்லாருக்கும் என ஸ்டாலினுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது, இந்த செய்தி பொன்முடிக்கு தெரியவர விருப்பமே இல்லாத புகழேந்தியை இந்த தொகுதியில் இழுத்து விட்டுள்ளார்.
திமுக வேட்பாளராக அறிவிக்கபட்ட புகழேந்திக்கு இந்த தெர்தலில் போட்டியிட விருப்பமே இல்லை என்கிறார்கள், இதற்கான காரணம் இன்னும் இந்த ஆட்சி முடிய ஏறக்குறைய 15 மாதங்கள் மட்டுமே உள்ளது, இந்த 15 மாதங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி இந்த தேர்தலில் போட்டியிட வேண்டுமா? நான் ஜெயித்தாலும் பெருசா எந்த ஆட்சி மாற்றமும் ஏற்பட போவதில்லை, எக்ஸ்டராவா ஒரு எம்.எல்.ஏ அவ்வளவு தான் அதற்காக நான் நிற்க்கணுமா? வேற யாருக்காவது இந்த வாய்ப்பை கொடுத்திருங்கன்னு எஸ்கேப் ஆக பார்த்திருக்கிறார். ஆனாலும் ஜேகத்ரட்சகனின் குடும்பத்தை இங்கே வர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவும்,பொன்முடியும் தன்னுடைய செல்வாக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும் இவரை களமிறக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், திமுக சார்பாக எத்தனை கோடிகள் வாரி இறைத்தலும் பாமகவின் வாக்கு வங்கி, அதிமுக அமைச்சரான சி.வி.சண்முகத்தின் செல்வாக்கை மீறி நம்ம ஆள ஜெயிக்க வைக்க முடியுமா? இந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்தால் மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்ததால் தான் வெற்றி பெற்றது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் உண்மையாகி விடுமே என்றும் திமுகவினர் கதி கலங்கி நிற்கிறார்களாம்.
வசமாக மாட்டிவிட்ட நடிகர் விஜய்! சிக்கலில் தனியார் கல்லூரி
நடிகர் விஜய் நடித்துள்ள “பிகில்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சம்பந்தபட்ட தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி தாம்பரம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியான சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்து விட்டது. ஆனால் அவர் பேசிய பேச்சுகளுக்கான சர்ச்சைகள் இன்னும் முடியவில்லை. ஆனால் அவரோ என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் என்று இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெளிநாடு கிளம்பிவிட்டார்.
சர்ச்சைக்கான காரணம்:
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணி ருக்காங்க என்று தமிழக அரசை சீண்டிய விஜய், யாரை எங்கே வைக்கவேண்டுமோ அவர்களை அங்கே வைத்தால் இது போல நடக்காது என்று கடுமையாக சாடினார்.
இவர்களுக்கு எதிராக நீங்கள் ஹேஷ்டேக் போடுவீர்கள் என்று நம்புகிறேன். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் போராட வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் தன்னுடைய ரசிகர்களை ஆளுங்கட்சிக்கு எதிராக தூண்டி விடுவது போல பேசினார். நடிகர் விஜய்யின் இந்த கருத்து தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக அமைச்சர்கள் நடிகர் விஜய்யின் இந்த கருத்துக்கு கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று விளக்கம் தர தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசு சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ‘பிகில் விழாவுக்கு எதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுத்தது?’ இதற்கு சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது . இந்த நோட்டீஸுக்கு கல்லுரி நிர்வாகம் என்ன விளக்கம் கொடுக்க போகிறது என்று தெரியவில்லை.
நடிகர் விஜய் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியதாக கூறும் இந்த விழாவானது சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. அங்கு இருக்கும் லியோ முத்து உள்ளரங்கில் இந்த விழா நடந்ததுள்ளது. இதற்கு முன்பே அங்கு மேலும் சில சினிமா பட விழாக்கள் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விழாவில் பேசிய விஜய் தமிழக அரசை மறைமுகமாக விமர்சித்த நிலையில் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நித்தியானந்த என்று சொன்னாலே பல விமர்சனங்களும் புகார்களும் வந்து கொண்டே இருக்கின்றன.அவர் வெளியிடும் அறிக்கைகள்,செய்திகள் அனைத்தும் சற்று விந்தையாகவும்,வேடிக்கையாகவும் உள்ளது. உதாரணமாக அந்தரத்தில் மிதக்க வைக்கிறேன் என்றது, சூரியனை 40 நிமிடம் தாமதமாக உதிக்க சொன்னேன் என்றது.
மேலும் சக்திகளை வெளியிடுகிறேன் என்ற பெயரில் கிராபிக்ஸ் வீடியோவை வெளியிட்டது. மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை நான் தான் முன்ஜென்மத்தில் கட்டினேன், அதன் லிங்கம் என்னிடம் உள்ளது என்று சொல்லிவிட்டு, இப்போது மூல லிங்கம் வேறு,மூலவர் லிங்கம் வெறு என பல்டி அடிப்பது. என பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.
இவரது செயல்களால் இவரை நெட்டிசன்கள் காமெடி கதாபாத்திரமாக சித்தரித்து பல நகைச்சுவை மீம்ஸ்கள் வெளிவருகின்றன.சினிமாவிலும் நித்தியானந்தாவை கலாய்க்கிறார்கள்.ஆனால் சாரா என்ற கனடாவை சேர்ந்த பெண் நித்தியானந்தா தனது ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளை கொடுமைபடுத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் கனடாவை சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்டரி என்ற பெண் சிஷ்யையாக இருந்து வந்தார்.பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறிவிட்டார்.அவர் அங்கு இருந்த நேரத்தில் திருவனாந்தபுரத்தில் உள்ள ஆசிரமத்தில் பணி நிமித்தமாக சென்றுள்ளார். அது குறித்து அவர் பேசுகையில் “அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கி படித்துவருகிறார்கள்.
மூன்றாவது கண்ணை திறப்பதற்காக பயிற்சி என்று பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர் “ என்றார். கழிவறைக்கு அவர்கள் சொல்லும் நேரத்தில் மட்டுமே செல்லவேண்டும்,மற்ற நேரத்தில் கழிவறைக்கு செல்லக்கூடாது,காலையில் பிரம்பால் அடித்து சிறார்களை எழுப்புகிறார்கள், ஒருவருக்கொருவர் பேசிகொள்ளகூடாது,இரும்பு கம்பிகள் நிறைந்த தனித்தனி அறைகளில் சிறைவைக்கபட்டுள்ளார்கள் என கூறினார்.இத்துடன் சாரா நித்யானந்தாவை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் தனவர்ஷா டூர் & டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. சுரேஷ் என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனமானது சுற்றுலா திட்டங்கள் மூலம் சீரடி, கோவா, மும்பை,அந்தமான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற பல வெளிநாடுகளுக்கும் செல்வதற்காக சலுகை கட்டணங்களை அறிவித்தது.
இதில் குறிப்பாக பயணத்திற்கு சில மாதம் முன்னதாகவே டிக்கெட் புக் செய்தால் அவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து ஏராளமானோர் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா சுல்வதற்காக டிக்கெட் புக் செய்திருந்தனர். நேற்று வரை இயங்கி வந்த அந்த நிறுவனம் இன்று காலை திடீரென மூடப்பட்டது.
இந்நிலையில் தங்களது பயணச்சீட்டுகள் வாங்குவது தொடர்பாக அந்த அலுவலகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் நிறுவனம் மூடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொருவரும் சில ஆயிரங்கள் முதல் பல லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியிருந்த நிலையில் தங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா ? பயணத்தைத் தொடர முடியுமா ? என தெரியாமல் தவித்தனர்.
இந்நிலையில் இந்த தகவல் அறிந்த ஏற்கனவே பதிவு செய்திருந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனையடுத்து டிராவல்ஸ் அலுவலகம் வந்த காவல்துறையினர், திங்கட்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் படி கூறி டிராவல்ஸ் அலுவலகம் முன்பு இருந்த அவர்களை கலைத்தனர்.
இந்நிலையில் காவல் துறையினரின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்தனர். நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவாகி விட்ட நிலையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக பணம் கட்டி ஏமாந்த சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநகர குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள், தீவிரவாதிகள் என யார் வந்தாலும் அவர்கள் திரும்பி போகக் கூடாது. கடந்த கால வரலாற்றில் 1965, 1971-ம் ஆண்டுகளில் செய்த தவறுகளை போல அவர்கள் மீண்டும் செய்யக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பாஜக அரசு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி உத்தரவிட்டது.இவ்வாறு பாஜக அரசால் 370-வது பிரிவு திரும்பப் பெற்றப்பட்டது ஏன் என்பது குறித்து மக்களுக்கு பாஜக சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி,பிஹார் தலைநகரான பாட்னாவில் ஜன் ஜாக்ரன் சபா என்ற மக்கள் விழிப்புணர்வுகூட்டம் பாஜக சார்பில் இன்று நடந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாஜக அரசின் சார்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
”பாகிஸ்தான் ஏற்கெனவே நம்பிக்கை இழந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா எல்லைப் பகுதிக்குள் யாரும் செல்லாதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இது மிகவும் நல்ல அறிவுரை. ஏனென்றால், அந்தத் தவறை அவர்கள் மீண்டும் செய்து இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லமாட்டார்கள். கடந்த 1967, 1971-ம் ஆண்டு செய்த தவறுகளைச் செய்துவிடக்கூடாது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கும், 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றதற்கும், அந்த மாநிலத்தில் உள்ள மக்களில் நான்கில் 3 பகுதியினர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். 370-வது பிரிவை நீக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் பாஜக ஒருபோதும் மென்மையான போக்கைக் கையாண்டதில்லை. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், நேர்மையாகவும் இருந்து வருகிறது.
காஷ்மீருக்கு 370-வது பிரிவு என்பது புற்றுநோய் போன்றது. அதை எடுத்தவுடன் ரத்தம் வருகிறது. காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் காரணமாக அங்கு ரத்தம் படிந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவை நீக்கியதைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் எல்லை தாண்டி தீவிரவாதிகளை நம் நாட்டுக்குள் அனுப்ப முயல்கிறது.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கும். ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாட்டு மக்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சு என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான்.
பாகிஸ்தான் தொடர்ந்து பலூச்சி மக்களுக்கு எதிராகவும், பஸ்தூன் மக்களுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதுபோல் தொடர்ந்து பாகிஸ்தான் செய்துவந்தால், பாகிஸ்தான் வரும் காலங்களில் இன்னும் துண்டு துண்டாகச் சிதறுவதை யாராதும் தடுக்க முடியாது”என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அனாதை தலைவர் ராமதாஸ் என்று கடுமையாக பேசிய மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பாடம் கற்பிப்பார்களா வன்னியர்கள்?
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது 3 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது அக்டோபர் 24 இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் அமையும் என்பதால் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதில் குறிப்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி அவர்கள் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். இதனால் திமுகவிற்கு விக்ரவாண்டி தொகுதி காலியானது.
வன்னியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரக்கூடிய விக்கிரவாண்டி தொகுதி, முழுக்க முழுக்க விவசாய பெருமக்களை கொண்ட செல்வச்செழிப்பு மிக்க தொகுதியாகும். இந்த தொகுதியின் வெற்றி தோல்வி என்பது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களிடமே இருக்கின்றது. வேட்பாளர் தேர்வில் கூட வன்னியர் சமுதாயத்தை தவிர வேறு யாரையும் இங்கு வேட்பாளராக நிறுத்த அதிமுக திமுக கட்சிகள் தயங்கும். 100% வன்னியர்கள் மட்டுமே இங்கு வேட்பாளராக நிறுத்த முடியும் என்ற நிலையில் தான் தற்போதைய சூழ்நிலை உள்ளது.
கட்சிகளின் பலம் குறித்து விக்கிரவாண்டி தொகுதியில் எடுத்துக்கொண்டால் அதிமுக திமுக இவர்களுக்கு ஈடாக பாட்டாளி மக்கள் கட்சியும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக இங்கு 41 ஆயிரம் வாக்குகள் பெற்றது. 1987ல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களில் பனையபுரமும் ஒன்று. இந்த கிராமமும் விக்கிரவாண்டியில் தான் இருக்கிறது. உயிரிழந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வன்னியர் சங்கம் சார்பாக வீரவணக்கம் இங்கு நடைபெறுவது வழக்கம்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.ராதாமணி அவர்களும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான், இதனால் திமுக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவரை தான் உறுதியாக நிறுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து கூட அக்கட்சியில் இருக்காது, விழுப்புரம் திமுக மாவட்டச் செயலாளர் பொன்முடி, கடந்த இரண்டு மாதங்களாக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டங்களை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் வன்னியர்களின் ஆதிக்கம் உள்ள தொகுதி என்று.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் விக்கிரவாண்டி தொகுதியில் முன்னிலை பெற்றார். இது திமுகவிற்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை வன்னியர் வேட்பாளர் தான் நிறுத்துவார்கள். ஏனென்றால் அமைச்சர் சி.வி.சண்முகம் வன்னியர் சமுதாயம். பக்கத்து தொகுதி விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர். தொகுதியில் செல்வாக்கு பெற்றவர். மேலும் கூட்டணி கட்சியான பாமகவின் செல்வாக்கு போன்றவை அதிமுகவிற்கு கூடுதல் பலம். அமைச்சரின் உறவினர் தான் இங்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற கருத்து நிலவி வந்த நிலையில் உள்ளூர் பிரமுகர்களையே நிறுத்த அமைச்சர் சண்முகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேட்பாளர் தேர்வு விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சண்முகத்திடமே ஒப்படைத்து விட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விக்ரவாண்டி தொகுதியில் அண்ணா திமுக வெற்றி பெற்றால் அரசு மீது இருக்கும் விமர்சனங்கள் முறியடித்து எடப்பாடி அவர்கள் செயல்படுகிறார் என்று அக்கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கடலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் திரு ராமதாஸ் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “அனாதை தலைவர்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் பேசினார். இது பாமகவினருக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது, விக்கிரவாண்டி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் துணை அமைப்பான வன்னியர் சங்கமும் மிக பலமான செல்வாக்கு பெற்றிருப்பதால், மு.க. ஸ்டாலின் என்னதான் சுழன்று செயல்பட்டாலும், திமுகவை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏற்கனவே உறுதி ஏற்றுள்ளதாக அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் ராமதாஸின் சொந்த மாவட்டம் என்பதால் அவர் நேரடியாகவே இங்கு களமிறங்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அன்புமணி ராமதாசும் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதாக பாமகவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு இரண்டும் பணத்தை வாரி இறைக்க தயாராகும் என்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள மக்களுக்கு திருவிழாக் கோலம்தான் என்பதில் ஐயமில்லை.
உடல்பருமனால் பெண்கள்
சந்திக்கும் சவால்களும் அதன் தீர்வுகளும்
ஹோமேக்கர்களாக இருக்கும் இல்லாத்தரசிகள்தான், உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், வேளைக்கு செல்லும் பெண்கள் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறது.உடல் பருமன் பிரச்சனைக்கு, அந்த வித்தியாசம் எதுவும் கிடையாது.வீட்டில் இருப்பவர்களோ,வேலைக்கு செல்பவர்களோ படித்தவர்களோ,படிக்காதவர்களோ- நீங்கள் யாராக இருந்தாலும் சரி உங்கள் உணவு பழக்கம் சரி இல்லை என்றால், உடல் பருமன் பிரச்சனை கண்டிப்பாக உங்களை தாக்கும்.
திருமணத்துக்கு முன் குண்டாக இருப்பவர்கள்,உணவைக் குறைப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற,குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட பரிந்துரைகளையே கடைப்பிடிக்கலாம். அதோடு,கொழுப்பு நிறைந்த உணவைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கவேண்டும்.சைவப் பிரியர்கள் என்றால், தயிர் ,வெண்ணெய்,நெய் ,எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம், உடலிலுள்ள கொழுப்பின் அளவை அபிரிமிதமாக உயர்த்திவிடும். நெய்யில் வறுத்து,பொரித்து என எதையுமே தொடாமல் இருப்பது உத்தமம். மேலும், மிக முக்கியமாக, அரிசி சார்ந்த உணவு வகைகளை அளவோடு சாப்பிடுவதன் மூலமாகவும் எடையை குறைக்க முடியும்.அசைவ பிரியர்கள்,அவர்கள் சாப்பிடும் அசைவ உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.
பொதுவாக பெண்கள் பிரசவத்தின் போதுதான் அதிகமாக குண்டாகிறார்கள்.கருத்தரிப்பதற்கு முன்பு இருந்த எடையைவிட 10 கிலோ வரை கூடுவது நல்லது.ஆனால் அதற்கு பிறகு அவர்கள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பது இல்லை .குழந்தைக்கு 3 வயதாகி பள்ளியில் சேர்த்த பிறகு, அவர்கள் உணவுபழக்கம் மாறி விடுகிறது. அப்போது பல தாய்மார்கள் காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள். அடிக்கடி டீ,காபி குடித்துவிட்டு வேலை செய்வார்கள்.குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய பிறகு, சமையல், துணி துவைத்து போன்ற எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஒரே வேளையாக மதிய உணவை சாப்பிடுவார்கள்.இந்த பழக்கம்தான்,அவர்கள் குண்டாவதற்கு எடுத்துவைக்கும் முதல் படி என்று அவர்களுக்கு தெரியாது.
தாய்மார்களின் உடல் குண்டாவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தங்களுக்கு தேவையான அளவு உணவை முதலில் சாப்பிட்டுவிடுவார்கள். பின் எல்லோரும் சாப்பிட்ட பிறகு மீதமாகும் உணவை, வீணாகிவிடுமோ என்று அதையும் சாப்பிட்டு விடுவார்கள் இதனாலும் உடல் எடை அதிகரிக்கும்.வயிறு ஒரு குப்பைத் தொட்டியில்லை என்பதைத் தாய்மார்கள் உணர வேண்டும் .இரவில் வெகுநேரம் டிவி பார்த்துவிட்டு சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்கவும். காய்கறிகள்,பழங்கள் அடங்கிய உணவை பெரியவர்கள் சாப்பிட்டு வர சிறியவர்களும் அவற்றை ருசித்து சாப்பிட்டு பழகுவார்கள். இதனால் குடும்பத்திற்கும் நல்ல ஆரோக்யம் கிடைக்கும். எனவே இவற்றை பின்பற்றி தாய்மார்கள் தங்களையும் குடும்பத்தையும் வளம்பெற செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
ஹெல்மெட் அணியாமல் சென்றதாக காவல் துறையினர் தடுத்த இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்
ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி போலீசார் தடுத்த போது லாரி மோதி இருசக்கர வாகனத்திலிருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் அந்த லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமான காவல் துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சூழ்நிலையை சமாளிக்க காவல் துறையினர் பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
சென்னைக்கு அருகிலுள்ள செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் தான் யுவனேஷ். இவர் சென்னையிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தான் பிரியா என்ற பிரியதர்சினி (வயது 23). இவர்களுக்கு இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு 7.30 மணி அளவில் பிரியா, செங்குன்றம் அடுத்த கே.கே.நகர் அருகே உள்ள காவல் உதவி மையம் அருகில் உள்ள பேக்கரியில் தனது தாய் அம்முவின் பிறந்த நாளுக்காக கேக் வாங்கினார். பின்னர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது காவல் உதவி மையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர்.
அங்கிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர், ஹெல்மெட் அணியாமல் சாலையை கடந்து செல்ல முயன்ற பிரியாவின் இரு சக்கர வாகனத்தை தான் வைத்திருந்த கம்பால் தடுக்க முயன்றார். இதனையடுத்து பிரியா வண்டியை நிறுத்தியுள்ளார்.
அப்போது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிரியாவின் மீதும் லாரி ஏறி இறங்கியது. இதில் அவரது 2 கால்களும் நசுங்கியது. வலியால் அவர் அலறி துடித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், பிரியாவை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் பிரியா கீழே விழுந்ததற்கு போலீசாரே காரணம் என்று கூறி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த ஊர்க்காவல் படை வீரரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியதுடன் பெட்ரோல் ஊற்றியும் எரித்தனர்.
பிரியா மீது மோதிய லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ஆத்திரத்தில் அந்த லாரி கண்ணாடிகளையும் பொதுமக்கள் கல்வீசி தாக்கி அடித்து உடைத்துள்ளனர். இதனால் சம்பவம் நடந்த அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.
இதுபற்றிய தகவல் அறிந்தததும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், பொன்னேரி டி.எஸ்.பி. பவன்குமார் ரெட்டி, சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இவர்களிடம் சமரசம் ஆகாமல் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சூழ்நிலையை சமாளிக்க பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் பல பக்கங்களில் சிதறி ஓடினர். இதற்கு பிறகே அந்த பகுதியில் கலவரம் கட்டுக்குள் வந்துள்ளது.
மேலும் இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கலவரத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.