பகத் பாசில் பிறந்த நாளுக்காக மீண்டும் ட்ரெண்டாகும் மாமன்னன் ரத்தினவேல் கவுண்டர்! இணையத்தை கலக்கும் மீம்ஸ் 

0
50
Fahadh Faasil
Fahadh Faasil

பகத் பாசில் பிறந்த நாளுக்காக மீண்டும் ட்ரெண்டாகும் மாமன்னன் ரத்தினவேல் கவுண்டர்! இணையத்தை கலக்கும் மீம்ஸ் 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அரசியல் கட்சியில் நிலவும் சாதிய பாகுபாடுகளை குறித்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் வடிவேல்,கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 

இந்த படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தின் இசக்கி கதாபாத்திரத்தின் நீட்சியே இந்த மாமன்னன் திரைப்படம் என்று பேசியது திரைத்துறையில் சர்ச்சையை கிளப்பியது.

இதனைத்தொடர்ந்து தியேட்டரில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக முழுநேர அரசியலுக்குள் நுழைந்த உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்து படத்திற்கு நல்ல வரவேற்பை அளித்தனர்.

இந்நிலையில் படத்தை பார்த்த பலரும் மாமன்னன் கதாபாத்திரம் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலை குறிப்பதாக கருத்து தெரிவித்தனர். அதாவது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான மாமன்னன் தோற்றத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சிறப்பாக நடித்திருப்பார்.இந்த மாமன்னன் கேரக்டர் முன்னாள் சபாநாயகர் தனபாலை குறிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

அதே போல நெகடிவ் கேரக்டராக வரும் ரத்தினவேல் கதாபாத்திரமும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த அரசியல் தலைவரையும், கட்டை சேர் போட்டு வேட்பாளரை உட்கார வைக்கும் காட்சியானது விசிக தலைவர் திருமாவளவனை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் அப்போது பேசப்பட்டது.

வழக்கமாக மாரி செல்வராஜ் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை காட்டுவதாக கூறிக் கொண்டு ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை கொடூர வில்லன்கள் போல சித்தரித்து அதற்கான அடையாளங்களையும் காட்சிகளில் வைப்பது வழக்கமாகி விட்டது.

அந்த வகையில் திட்டமிட்ட இவர் இந்தப் படத்தில் வரும் பகத் பாசில் நடித்த ரத்தினவேல் கேரக்டரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த கொடூர வில்லனாக காட்ட முயற்சித்திருப்பார். ஆனால் கொடூர வில்லனாக காட்ட நினைத்து ஒரு மாஸான ஹீரோ போல காட்டியிருக்கிறார் என்பது படம் பார்த்தவர்களால் பெரும்பாலானவர்களால் பேசப்பட்டது. 

இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி OTT தளத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தான் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட நினைத்து பார்க்காத அளவுக்கு ஏற்கனவே குறிப்பிட்ட அந்த ரத்தினவேல் என்ற நெகடிவ் கேரக்டரை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர்.

அந்தவகையில் நெகடிவ் கேரக்டரில் பகத் பாசில் நடித்துள்ள ரத்தினவேல் வரும் காட்சிகளை இணைத்து தாங்கள் சார்ந்த சமுதாய பாடல்களை எடிட்டிங் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.இந்த காட்சிகளானது தமிழகத்தில் உள்ள அணைத்து பெரும்பான்மை சமுதாயத்திற்கும் பொருந்தும் வகையில் இருந்ததால் அதிகமாக வைரல் ஆனது.

இதை தமிழக ஊடகங்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட யாரும் எதிர்பார்க்காததால் பகத் பாசிலை கொண்டாடும் நபர்களை முட்டாள்கள் எனவும்,சாதி வெறியர்கள் என்றும் சித்தரித்து செய்திகள் வெளியிட்டனர். எதையும் கண்டுகொள்ளாத அந்த தரப்பு கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் அந்த ரத்தினவேல் கேரக்டரை கொண்டாடி மகிழ்ந்தனர். 

இதை ரசிக்கும் விதமாக பகத் பாசிலும் தீடீரென அவருடைய கவர் போட்டோவை மாற்றியிருந்தார்.ஆனால் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக கவர் போட்டோவை வைத்த சில மணி நேரங்களில் அதை நீக்கினார்.இந்நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதியான இன்று பகத் பாசிலின் பிறந்த நாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரத்தினவேல் கவுண்டர் ஆதரவாளர்கள் தங்கள் சமுதாயம் சார்ந்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இணையத்தை வைரல் ஆக்கி வருகின்றனர்.