அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டம்: முக ஸ்டாலின் முக்கிய அறிக்கை

0
63
MK Stalin
MK Stalin

முக ஸ்டாலினின் மிசா சிறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டங்களை தவிர்க்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. இதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தன்மான – அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. எனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் இந்த நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிவிட்டது; அவ்வளவு தான். பயனில் சொல் பாராட்டுவாரை பதர்தான் என்றார் அய்யன் திருவள்ளுவர். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவரின் அறிவுரைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்வோம். மறப்போம், மன்னிப்போம்! இது தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள். பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்து கொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டது

இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

author avatar
CineDesk