நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

0
120

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது, இதனால் தமிழ்நாடு மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான முதல் மிக கனமழை வரையில் பெய்து வருகின்றது. தலைநகர் சென்னையில் பெய்த மழையின் காரணமாக, மாநகரம் மறுபடியும் வெள்ளத்தில் சிக்கி இருக்கிறது.

திருநின்றவூர், முடிச்சூர், தாம்பரம், உள்ளிட்ட புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருக்கும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகியிருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் 12 கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது அதனடிப்படையில் நாகை கடலூர் மயிலாடுதுறை தூத்துக்குடி ராமநாதபுரம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் என முதல் மிக கனமழையும், குமரி திருநெல்வேலி விருதுநகர் விழுப்புரம் மதுரை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் நேற்றைய தினம் பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது இருந்தாலும் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை ஆகவே எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது ஆனாலும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

சென்னையில் நேற்று அதிகாலை பொழுது மழையுடன் தொடங்காமல் வெயிலுடன் ஆரம்பித்து நேரம் செல்ல, செல்ல கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்தது. அதன் பிறகு சிறிது நேரத்தில் வானம் தெளிவாகி மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியது. எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், வேப்பேரி, உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுள்ளென்று அடித்த சமயத்தில், அடையார், கொட்டிவாக்கம், திருவான்மையூர், நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதன்பிறகு அந்த பகுதியில் வெயில் அடித்த சமயத்தில் இதற்கு முன்பு மழை பெய்யாத பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இயற்கையை கணிக்க இயலாது என்பதை நிரூபித்துக் காட்டும் விதத்தில் வானிலை நிலவி வந்தது.

சென்னையில் நேற்றைய தினம் திடீரென்று மழையும், திடீரென்று வெயிலும், மாறி,மாறி அடித்தது பொதுமக்களிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது போன்று இருந்தது.

இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது நாளைய தினம் மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உரு மாறக்கூடும் எனவும் அறிவித்திருந்தார். ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைய தினம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தற்சமயம் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடற்பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பிருக்கிறது. மற்ற கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளைய தினம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம்,, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை,, தென் மாவட்டங்களில் அநேக பகுதிகளில் இடியுடன் மிதமான மழையும் மற்றும் வடமாவட்டங்கள், அதோடு புதுவை, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுநாள் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதேபோல வியாழக்கிழமை அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது எனவும், அதேபோல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஆகவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.