ரேசர் பிளேடால் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் – ரத்தம் கொட்டி உயிரிழந்த சிசு..!

0
56
முகச்சவரம் செய்யும் ரேசர் பிளேடால் பிரசவம் பார்த்த மருத்துவரால் தாயும், குழந்தையும் உயிரிழந்த பரிதாபம் உத்திரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள சைனி கிராமத்தில் செயல்பட்டு வந்தது தான்  ‘மா சாரதா’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் 35 வயதான பூனம் என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். பிரசவ வலியில் துடித்த அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் இருந்த ராஜேந்திர குமார் சுக்லா என்பவர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்த சில நிமிடங்களிலேயே குழந்தையும் அந்த பெண்ணும் உயிரிழந்துள்ளனர். 
தனது மனைவி மற்றும் குழந்தையை பறிக்கொடுத்த அந்த பெண்ணின் கணவர் ராஜாராம் போலீஸில் புகார் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது தான் அந்த மருத்துவமனை குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த அதாவது உயிரிழந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த ராஜேந்திர குமார் சுக்லா 8ம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றும், மருத்துவமனையை நடத்தி வந்த ராஜேஷ்குமார் சாஹ்னி 12ம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றும், மருத்துவமனையில் உதவியாளராக இருந்தவர் 5ம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவராக பணியாற்றிய ராஜேந்திர குமார், முகச்சவரம் செய்யும் பிளேடை கொண்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார். இதனால் அடுத்த சில நிமிடங்களில் ரத்த போக்கு ஏற்பட்டு அந்த பெண்ணும், குழந்தையுமே உயிரிழந்துள்ளனர். இந்த மா சாரதா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காகவே 8ம் வகுப்பு மட்டுமே படித்த ராஜேந்திர குமார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அந்த மருத்துவமனையும் முறையாக பதிவு செய்யப்படவில்லை.
போலி மருத்துவர், போலி உதவியாளர், போலி உரிமையாளர் என ஒரு மருத்துவமனையையே போலியாக நடத்தி இரு உயிர்களை பலி வாங்கிய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இது போன்று முறையாக அனுமதி பெறாமல் போலி சிகிச்சை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

author avatar
CineDesk