ஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?

0
134

ஒன்பது ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?

 

ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.இந்நிலையில் திங்கட்கிழமை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆடிப்பூர நாளாகும். இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுகிறது.அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, குங்கும காப்பு நடத்துவார்கள்.அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். எனவே ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல் திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.

 

ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே அம்பாள் படத்துக்கு மலர்கள் சாற்றி வழிபடலாம். அம்பாளுக்கு உரிய லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து நெய் விளக்கேற்றி வழிபடலாம்.

கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் அதாவது ஆடி வளர்பிறை சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது.இந்தநாளில் விரதமிருந்து நாக பிரதிகளுக்கு பூஜை செய்வதை நாக சதுர்த்தி விரதம் என்கின்றனர்.நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்கு பூஜை செய்து, புற்றுக்கு பால் ஊற்றி, புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து கொள்வார்கள்.

 

ஆனால் இதனை இன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், சங்குபாலன், கார்க்கோடகன், குளிகன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தை சொல்லிக்கொண்டே புற்றுக்கு பால் ஊற்றி பூஜிப்பது நல்லது.

திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்வார்கள்.நாக சதுர்த்தி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நெய்வேத்தியம் செய்து 12 முறை வலம் வந்து வணங்கினால் நன்மை உண்டாகும்.

 

author avatar
Parthipan K