50 விழுக்காட்டினருக்கு மட்டுமே அனுமதி – மத்திய அரசு

0
65

50 விழுக்காட்டினருக்கு மட்டுமே அனுமதி – மத்திய அரசு

நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் ஒமிக்ரான் வைரஸும் நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பரவலை மேலும் பரவாமல் தடுக்க அந்தந்த மாநிலங்கள் அங்குள்ள தொற்று பரவலை பொறுத்து  கட்டுப்பாடுகளை  விதித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசும் தனது பல்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ள அலுவலகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50  விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே நேரடியாக பணிக்கு வர வேண்டும் என்றும் மீதமுள்ள ஊழியர்கள் நேரடியாக பணிக்கு வராமல் வீடுகளில் இருந்தே தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் நேரடியாக பணிக்கு வருவதை விடுத்து அவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

எக்காரணத்தை கொண்டும் அலுவலகங்களில் கூட்டம் சேர கூடாது எனவும் மற்றும் அலுவலகங்களில் கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K