காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – போலீசார் விசாரணை!!

0
147
#image_title

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – சாலையில் தரதரவென்று இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் வீடியோ வைரல் – போலீசார் விசாரணை!

கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கவுசல்யா நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.

பணி காரணமாக அவரது கணவர் நேற்று காலை நடைபயிற்சிக்கு வரவில்லை. இதனால் கவுசல்யா மட்டும் தனியாக நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் ஜி.வி. ரெசிடென்சியில் உள்ள பேக்கரி கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் மர்ம நபர்கள் வந்தனர். அதில் ஒரு நபர் காரின் முன் பக்க கதவை திறந்து, அதன் வழியாக கையை வெளியே நீட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த கவுசல்யா கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவத்தினால் கவுசல்யா அதிர்ச்சி அடைந்த போதிலும் தனது இருகைகளாலும் நகையை இருக பற்றிக்கொண்டார். மேலும் அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.

மர்ம நபர்கள் நகையை பறிக்க முயன்றபோது கவுசல்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகை பறிப்பு சம்பவம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- முன்பு திருடர்கள் நடந்து வந்து செயின் பறிப்பார்கள், பின்னர் இருசக்கர வாகனங்களில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.

தற்போது காரில் வந்து நகை பறிக்கும் அளவிற்கு முன்னேறி விட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. எனவே நடைபயிற்சி செல்பவர்களின் நலன் கருதி காலை நேரத்திலும் போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

author avatar
Savitha