சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு! இவர்களுக்கு மட்டும் அனுமதி!

0
81

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல கால பூஜைக்கு தினசரி ஆயிரம் பக்தர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனுமதிக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் அக்.16 முதல் ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆனால், இன்று எந்தவித பூஜைகளும் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை (அக். 17) அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இந்தப் பூஜை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு, வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முதல் 250 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். மேலும், நிலக்கல்லில் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பம்பையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் குளிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் கொண்டு வரும் நெய், அபிஷேகத்திற்கு பின் பக்தர்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் வழியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவணை, அப்பம் வழக்கம் போல் விற்பனை செய்யப்படும்.

சிறப்பு பூஜைகள் அனைத்தும் முடிந்தபின், 21ம் தேதி இரவு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K