சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

0
63
#image_title

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவரது நீண்ட கால தோழியான சசிகலா அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் அவர்கள் துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அவர்கள் சிறை சென்ற நிலையில் அதிமுக பொதுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி, புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளாராக ஓ.பன்னீர் செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளாராக எடப்பாடி பழனிசாமி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு சசிகலா அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டு அவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது.

உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா அவர்கள் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி அவர் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி காட்டி இருக்கிறது.