திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்ட சீமான்! கொந்தளிக்கும் பொதுமக்கள்

0
68
BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned
BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்ட சீமான்! கொந்தளிக்கும் பொதுமக்கள்

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்திருந்த ஒரு சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் வெற்றியை தீர்மானித்த மகளிருக்கு நிதியுதவி,நகைக்கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இது தேர்தல் நேர ஏமாற்று வேலையோ என பலரும் சந்தேகிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வரும் என திமுகவின் அமைச்சர்கள் பலரும் கூறி வந்த நிலையில் அது குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.ஆனால் அந்த அறிவிப்பில் 35 இலட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று வெளியாகியுள்ளது காத்திருந்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பிற்கு பல தரப்பிலிருந்து விமர்சனம் எழுந்துள்ளது.இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

நகைக் கடன் தள்ளுபடி குறித்து திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 35 இலட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்ற தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

தேர்தல் நேரத்தில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து அதிகாரத்தை அடைந்துவிட்டு, தற்போது அதில் நான்கில் ஒரு பங்கு மக்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏமாற்றும் திமுக அரசின் வஞ்சகச் செயல் கண்டனத்திற்குரியது.

விவசாயிகள் நகைக் கடன்கள் பெற்றதில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகக் கூறி, நகைக்கடன் தள்ளுபடியை திமுக அரசு கிடப்பில் போட்டபோதே, குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குதல், நீட் தேர்வு ரத்து என்பதுபோல நகைக்கடன் தள்ளுபடியும் திமுகவின் தேர்தல் நேரத்து ஏமாற்று நாடகமோ? என்ற சந்தேகம் மக்களிடம் வலுத்தது.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்ற நிபந்தனை திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்டுள்ளது.

ஏழை விவசாயிகள் வறுமை, இயலாமையின் காரணமாகவே பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் பெற்ற நிலையில், அரசு ஒரு வறுமையைக் காரணம் காட்டி மற்றொரு வறுமையைத் தீர்க்க மறுப்பது எவ்வகையில் அறமாகும்?

5 சவரனுக்கு மேல் 1 கிராம் கூடுதலாக நகைக்கடன் பெற்றிருந்தாலும் நகைக்கடன் கிடையாது என்பதும், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண் கொடுக்காதவர்களுக்கும், தவறாகக் கொடுத்தவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது என்பதும் மிகமிக அநீதியான விதிமுறைகள் என்று அரசுக்குத் தோன்றவில்லையா?

ஒருவேளை ஆதார், குடும்ப அட்டை எண்களை வங்கியில் பதிவு செய்தவர்கள் தவறுதலாகப் பதிவு செய்திருந்தால் அதற்குப் படிக்காத பாமர மக்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும்? சரியாக விசாரிக்காமல் நகைக்கடன் வழங்கிய அதிகாரிகளை விடுத்து, மக்களைக் குற்றவாளியாக்கி நகைக்கடன் தள்ளுபடி வழங்க மறுப்பது முறையான செயல்தானா என்பதை அரசு சிந்திக்கத் தவறியதேன் ?

ஆகவே, திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதி அடிப்படையில் 5 சவரன்வரை நகைக்கடன் பெற்ற ஏழை மக்கள் அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.