ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

0
97
Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today
Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி), இந்திய தகவல்தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி) உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) சேருவதற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கும் தகுதி பெறுவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு வரும் கல்வியாண்டில் இரு முறை நடத்தப்படவுள்ளது. ஜனவரி 24-ஆம் தேதி தொடங்கும் முதலாவது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 15-ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் பல லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இப்போது பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதற்கு காரணம் இரு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் தேர்வுத்துறை செய்த தவறு தான். கூட்டு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த மதிப்பெண் எவ்வளவு? மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு? பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு ஆகிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் கொரோனா உச்சத்தில் இருந்ததால் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை; எனினும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. தேர்வுகள் நடத்தப்படாததால் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் விவரங்கள் எதுவும் குறிப்படப்படவில்லை.

அதனால், 2020-21 கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மதிப்பெண்கள் இல்லாததால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் 30,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசின் தேர்வுத்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

2020-21ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்ப்பிடப்பட்டிருக்கும்; மதிப்பெண் வழங்கப்படாது என்று செய்திகள் வெளியானபோதே, அதனால் பிற்காலத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதை சுட்டிக்காட்டி அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் எழுதிய முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று 11.06.2021 அன்று வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து சி.பி.எஸ்.பி மாணவர்களுக்கு பழைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாததால் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

கூட்டு நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை சில தளர்வுகளை அளித்தால் தவிர, இந்த சிக்கலுக்கு தீர்வு இல்லை. கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள்ளாக தமிழக அரசு தேர்வுத் துறையால், 2020-21 ஆம் ஆண்டில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை ஆய்வு செய்து, அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது சாத்தியமே இல்லை. அவ்வாறு வழங்கினாலும் அதை தேசிய தேர்வு முகமை ஏற்குமா? என்பது கேள்விகுறி தான். அதனால், இந்த சிக்கலுக்கு தேசிய தேர்வு முகமை தான் தீர்வு வழங்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தான் ஒரே தீர்வு ஆகும். எந்த வகையில் பார்த்தாலும் கூட்டு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களும், நடப்பாண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறப் போகும் மதிப்பெண்களும் தான் மாணவர்களின் உயர்தொழில்நுட்ப கல்விக்கான வாய்ப்புகளை தீர்மானிக்கும். அதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு எந்த பங்கும் இல்லை. அதனால் அதை கட்டாயப்படுத்த தேவையில்லை.

எனவே, தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான இடங்களில் தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் குறிப்பிடுவதற்காக ஏதேனும் குறியீட்டை தேசிய தேர்வு முகமை அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.