தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்!

0
179
#image_title

தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நாளை(ஜனவரி25) தைபூசம் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அலை அலையாக குவிந்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தில் வருடந்தோறும் தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழா நாளை அதாவது ஜனவரி 25ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது. தைபூசத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு முருகப் பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்படவுள்ளது.

அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் இறங்கி புனித நீராடும் நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் நிலையில் அங்கும் சுவாமிக்கு தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றது. அதைத் தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் கொடுக்கவுள்ளார்.

இதையடுத்து தைப்பூசம் நாளில் முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி எடுத்தும் அலகு குத்தியும் முருகனை தரிசனம் செய்ய திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

முருகப் பெருமானை கடலில் கண்டெடுத்த நாளான இன்று(ஜனவரி24) அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து இன்றும் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்று வருகின்றது.

அதைப் போலவே அறுபடை வீடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து அலகு குத்தி பாதயாத்திரையாக முருகனை தரிசனம் செய்வதற்கு குவிந்து வருகின்றனர்.