மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா!!

0
67
#image_title

மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் முக்கியமான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக விளங்கியவர், மதுரையைச் சேர்ந்த தியாகி தோழர் பொதும்பு பொன்னையா அவர்களைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

1948ஆம் ஆண்டு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள், தோழர்கள் காவல்துறையினரின்   கண்களில் படாமல் தலைமறைவாக செயல்பட்டு வந்தனர். கட்சி பணியும் ஆற்றினர். அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கியவர் தியாகி தோழர் பொதும்பு பொன்னையா. மதுரை மாவட்டம் பொதும்பு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் தோழர் பொன்னையா அவர்கள்.

இவர், இரவு வேளைகளில் காடுகளில் பதுங்கி இருப்பார் பகலில் ஊருக்குள் வருவார். ஊரில் உள்ள யார் வீட்டிலாவது சென்று உறங்கிவிடுவார். சுற்றுப்புற ஊர்களில் யாருமே இவரைக் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்றவர்.

இவர் தூங்கும் வீட்டில் அடுப்பு பற்ற வைத்து சோறாக்க மாட்டார்களாம். அடுப்பு புகை அவர் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக. சோறாக்காவிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி சாப்பிடுவார்கள்? என்ற கேள்வி எழலாம். ஊர் மக்கள் அந்த வீட்டினருக்கு உணவளிப்பார்களாம். அப்படி மக்களால் பாதுகாக்கப்பட்ட தோழர். பொன்னையா  வயற்காட்டில் வைக்கோல் படப்பில் ஒழிந்து இருந்த போது பாம்பு கடித்து உயிரிழந்தார். மக்கள் இன்னும் கூட அவர் வாழ்ந்த வீட்டில் சூடம் ஏற்றி வழிபடுகின்றனர்.

எளிய மக்களின் தலைவராக வாழ்ந்து மறைந்த தோழர் பொதும்பு பொன்னையா அவர்களை இன்னும் அக்கிராம மக்கள் நினைவு கூர்கின்றனர்.

அந்த காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று பிரிவு எல்லாம் கிடையாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான். கட்சியும் இயக்கமும் ஒன்றாக இணைந்துதான் இருந்தது. இந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த பல தோழர்கள் சுதந்திரப் போராட்டத்திலும் சரி; நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் சரி எளிய மக்களின் குரலாக விளங்கினர். தடை செய்யப்பட்டாலும், காவல் துறையினரின் அச்சுறுத்தல் இருந்தாலும் மறைந்திருந்து செயல்பட்டு வந்தனர். தேர்தல் அரசியலில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரிதாகச் சாதிக்கவில்லை என்றாலும்; மக்கள் பணியாற்றுவதிலும், மக்கள் பிரச்சனையில் தலையிட்டு அதில் தீர்வு காண்பதில் முதன்மை ஆளாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

author avatar
Parthipan K