தொழிலாளர் நலத் திருத்தச் சட்டத்தில் உள்ள நலனைப் பாதிக்கும் பிரிவுகளை நீக்க முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் – விசிக திருமாவளவன் கோரிக்கை!

0
98
#image_title

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் திருத்த சட்டத்தில் உள்ள தொழிலாளர் நலன் பாதிக்கும் பகுதிகளை நீக்க முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் விடுதலை முன்னணியினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்:

உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே 1, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்திற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 8 மணிநேர வேலை என்பதை உழைக்கும் வர்க்கத்திற்கான உரிமை என நிலை நாட்டிய வரலாற்று சிறப்புக்குறிய நாள் மே 1.

இந்தப் போராட்டத்திற்காக உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செம்மாந்த வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகமெங்கும் வாழும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்திற்கும் விசிக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மையில் சட்டப்பேரவையில் 12 மணிநேர வேலை என சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. திமுக தலைமையிலான ஆளுங்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக உட்பட தோழமைக் கட்சிகளும் அதற்கு கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தது.

முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சிகளுடன், தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த சட்டத்தை திரும்ப பெற்றுள்ளார். மாண்புமிகு முதல்வர் தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து இந்த துணிச்சலான முடிவை மேற்கொண்டு இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது. இந்திய ஒன்றிய அரசு 44 தொழிலாளர் நல சட்டங்களை தொகுத்து நான்கு சட்டங்களாக மாற்றி இருக்கிறது.

அந்த சட்டங்களில் தொழிலாளர் நலன் பாதிக்கப்படும் பல பகுதிகள் உள்ளது. அந்த பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். இயன்றால் பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும். சட்டமன்ற கூட்டத் தொடரிலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக கர்நாடகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தென்னிந்திய மாநிலங்களை அது வலுவாக பாதிக்கும் என்று கருதுவதால் நாளை கர்நாடகா பயணம் மேற்கொண்டு இரண்டு நாள் அங்குள்ள தமிழர்கள் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

author avatar
Savitha