விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு! 

0
111

விழாவிற்கு அனுமதி மறுத்த மாவட்டநிர்வாகம் பொதுமக்கள் சாலை மறியல்!  போக்குவரத்து ஸ்தம்பிப்பு! 

ஓசூர் அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பொங்கல் விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓசூர் அருகே கோபசந்திரம் சின்ன திருப்பதி கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி எருது விடும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்  எருது விடும் விழாவிற்கு ஒரு வாரம் முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிகோரி கடிதத்தை விழா குழுவினர் அளித்தனர். ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வரை ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி பதில் அளிக்கவில்லை.

இன்று விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது காளைகளுடன் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர். ஆனால் எருது விடும் விழாவிற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாததால் காவல்துறையினர் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து விழாவிற்கு வந்த பொதுமக்கள் இளைஞர்கள் விவசாயிகள் என அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் கற்களை கொட்டி போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இரு பக்கங்களிலும் இதனால் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஏராளமான அரசு பஸ்கள் கார்கள் லாரிகள் மீது கற்களை வீசினர் இதனால் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. வாகனங்களை மறித்து அதன் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பினர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கூட்டத்தில் இருந்தவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை போராட்டக்காரர்கள் மீது வீசி எறிந்தனர். இதன் பின்னரே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் இரு பக்கங்களிலும் வாகனங்கள் சுமார் 4 மணி நேரம் வரிசை கட்டி நின்றன. இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவிற்கு அனுமதி அளித்ததால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. பின்னர் சூளகிரி போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.