கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்ற இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கை!! தமிழக அரசு ஏற்று ஒப்புதல்!

0
148
#image_title

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது.

இலங்கை அகதி ராஜன் அவரது சொந்த நாடான இலங்கைக்கு செல்லும் வகையில் பயண ஆவணங்கள் குறித்த விவரங்களை 8-ஆம் தேதிக்குள் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்.

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜன், தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இலங்கை அகதி ராஜன், முன் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மீண்டும் பரிசீலினை செய்ய வேண்டும். அதற்குள் அவரை ஒரு வாரத்துக்குள் சிறப்பு முகாமுக்கு மாற்ற வேண்டும் என கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் கடந்த 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதா என நீதிபதிகள் வினவினார்கள். இதற்கு மனுதாரர் தரப்பில் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பியது.அதில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்காமல் தவிர்க்கிறோம். 24 மணி நேரத்துக்குள் சிறப்பு முகாமுக்கு ராஜனை மாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என கூறினர்.

இலங்கை அகதி ராஜன் முன் விடுதலை குறித்து மீண்டும் பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு மூன்று வாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இலங்கையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ராஜனை திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்ற சிறைத்துறை டிஜிபிக்கு தமிழ்நாடு அரசு கடந்த 27-ஆம் தேதி இரவு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மனுதாரரை திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றியுள்ளோம்.மனுதாரர் ராஜனை முன் விடுதலை செய்யும் அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் மனுதாரர் ராஜன் இலங்கை செல்வதற்கான பயண ஆவணங்கள் தயாராகி வருவதால் சில வாரங்கள் அவகாசம் கோரப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இலங்கை அகதி ராஜன் அவரது சொந்த நாடான இலங்கைக்கு செல்லும் வகையில் பயண ஆவணங்கள் குறித்த விவரங்களை 8-ஆம் தேதிக்குள் தெரிவிக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து, விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்தது.

author avatar
Savitha