ஸ்டாலின் மகனுக்கு ஏன் இந்த நிலைமை? திருட்டு புகாரில் சிக்கிய உதயநிதி…!

0
83
DMK
DMK

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பிரச்சாரம் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. கட்சி தலைவர்கள் ஒருபுறமும், வேட்பாளர்கள் மறுபுறமும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக ‘அன்பார்த்த வாக்காள பெருமக்களே’ என மைக்கில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு செல்லாமல், களத்தில் இறங்கி காய்கறி விற்பது, மீன் பொறிப்பது, பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, கபடி விளையாடுவது என தனக்கு தெரிந்த சகல வித்தைகளையும் செய்து காண்பித்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

 

அப்படித்தான் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் முதன் முறையாக களமிறங்க உள்ளவருமான உதயநிதி ஸ்டாலின் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று மதுரை மாவட்டம் விளாத்திக்குளத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கையில் செங்கல்லை தூக்கிக் கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது மக்களிடையே பேசிய உதயநிதி, ‘3 வருடங்களுக்கு முன்பு அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தாங்க. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைத் தான் இப்போ நான் கையோட எடுத்து வந்திருக்கிறேன் எனக்கூறி செங்கல்லை தூக்கி காண்பித்தார்.

உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் ஏந்திய படி பிரச்சாரம் செய்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் எய்ம்ஸ் வளாகத்தில் இருந்து செங்கலை திருடியதாக உதயநிதி மீது கோவில்பட்டி காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகி நீதி பாண்டியன் புகார் அளித்துள்ளார். போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில், ​‘மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மோடி அவர்களால் கடந்த 27.01.2019ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்து. அதனைத் தொடர்ந்து கடந்த 01.012.2020ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே சொத்தின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச்சுவர் வளாகத்திற்குள் இருந்த செங்கலை திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடி கொண்டு வந்துள்ளார். இந்த உண்மையை அவரே விளாத்திக்குளம் பேருந்து நிலையத்திற்கு முன்பு நடந்த பிரச்சார கூட்டத்தில் ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், தான் திருடி கொண்டு வந்த அந்த செங்கலையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்து காண்பித்தார்.

 அவரின் இத்தகையை செயல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380ன் படி தண்டிக்க தக்க குற்றச் செயலாகும். ஆகவே  காவல் ஆய்வாளர் அவர்கள் இப்புகார் மனு மீது விசாரணை செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வளாகத்திற்குள் இருந்து  செங்கலை திருடிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அதனை விளாத்திக்குளத்தில் வைத்து ஒப்புக்கொள்ளவும் செய்த உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்வதோடு, அவர் திருடி வந்த செங்கலை கைப்பற்றி சட்டப்படி தண்டனை பெற்று தந்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

author avatar
CineDesk