புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

0
144

புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்! 

முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் பழங்குடியின பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு என்னும் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் காட்டு யானைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சி யானைகள் முகாம் ஒன்றும் உள்ளது.

இந்த வனப் பகுதியை சுற்றி பழங்குடி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த மாரி என்ற பழங்குடியின பெண்ணை நேற்று காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரைத் தேடிய பொழுது வளர்ப்பு யானைகள் பயிற்சி முகாம் அருகில் வனப்பகுதியில் அவரது சடலம் கண்டறியப்பட்டது. அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன. கால்பாகம் கடித்து குதறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் காணாமல் போன மாரியை புலி தாக்கி கொன்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. அவரைக் கொன்ற புலி அவரது கால் பாகத்தை கடித்துத் தின்றுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை போலீசார் மாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வனத்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

இதையடுத்து புலியை பிடிக்க வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர். மாரியைக் கொன்ற புலியை பிடிக்க வேண்டும் என தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.