3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்

0
187
#image_title

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன் பின்னர் திமுக ஆட்சியில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது வரை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,” சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்ற கூலித்தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 43 ஆவது தற்கொலை இது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 14-ஆவது தற்கொலை இது. கடந்த 3 நாட்களில் நிகழ்ந்த 2-ஆவது தற்கொலை இது . இவற்றுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பது புள்ளிவிவரங்களுடன் விளக்கப்பட்டிருக்கும் போதிலும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமற்றது. ஆளுநர் பிடிவாதம் காட்டக்கூடாது.  ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் இத்தகைய தற்கொலைகள் தொடர்கதையாகிவிடும். எனவே ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

author avatar
Parthipan K