வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!!

0
156
#image_title

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!!

இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் என்ற ஒற்றை சொல்லை வைத்து பல நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வது ஒரு வாடிக்கையாக உள்ளது. சாதாரண வீட்டு உபயோக பொருட்களை கூட ஆன்லைன் மூலம் வாங்கிவிட்டு பின்பு அதனால் ஏற்படும் பின்விளைவுகளில் சிக்கிக்கொண்டு விழி பிதுங்க நிற்பது பொது மக்களுக்கு ஒரு வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

எல்லாவற்றிலும் புகுந்து விட்ட ஆன்லைன் வர்த்தகம் அதிலும் குறிப்பாக பெண்களை மையப்படுத்தி வரும் விளம்பரத்தை நம்பி ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. சென்னையை சேர்ந்த பெண்கள் பலர் தங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

மறுமுனையில் பேசிய பெண் ஒருவர் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு நாங்கள் சில வழிமுறைகளை சொல்கிறோம் அதன்படி நீங்கள் செய்தால் போதும் என்று கூறியவுடன், இதனை உண்மை என நம்பிய அந்த பெண்கள் அவர்கள் கூறிய படி சில விஷயங்களை செய்துள்ளனர். ஓரிரு நாட்கள் சென்றவுடன் அந்த நிறுவனத்தில் இருந்து பேசிய பெண் உங்கள் முழு உடலையும் நிர்வாணமாக காண்பிக்க வேண்டும் அப்போது தான் உங்கள் எடைக்கும் உடல் வாகுக்கு தகுந்தவாறு உடல் பயிற்சி அளிக்க முடியும் என கூறியதை நம்பிய அந்த பெண்கள் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி உள்ளனர்.

சில நாட்கள் கழித்து அந்த நிறுவனத்தில் இருந்து பேசிய ஒரு ஆண் உங்களுடைய ஆபாச புகைப்படம் தன்னிடம் உள்ளதாக கூறி மிரட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, பெண் குரலில் பேசியது பெண்ணல்ல என்றும் சென்னை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திவாகர் என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில் ஆன்லைன் மோசடி குறித்து எத்தனையோ விழிப்புணர்வு செய்தாலும் பொதுமக்கள் அதனை கேட்பதில்லை, சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருந்தாலே இது போன்ற பேராபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என கூறி உள்ளனர்.