கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! 

0
224
#image_title

கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! 

மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்பு மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..”

கொரானாவிற்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி பள்ளிகளை தலா 10 கோடியில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

கோடை தொடங்கியுள்ள நிலையில் ரசாயனமின்றி பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் , குளிர்பானங்கள் தரமானதா? என ஆய்வு நடத்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் , உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி நல அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா . சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பேட்டி:

நிதி நிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட்ட 106 அறிவிப்புகளையும் செயல்படுத்துவது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.15 வது நிதிக்குழு பரிந்துரைப்படி , பழைமையான மருத்துவமனை கட்டிடங்களுக்கு மாற்றாக , முன்னுரிமை அடிப்படையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

‘ நமக்கு நாமே ‘ திட்டம் மூலம் மருத்துவமனைகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் ‘ வருமுன் காப்போம் ‘ மருத்துவ முகாம்களை மக்கள் பிரதிநிதிகளை கூடுதலாக ஒருங்கிணைத்து நடத்த அறிவுறுத்தப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி , நாய் கடி மருந்துகள் போதுமான அளவு கடந்த 20 மாதங்களாக இருப்பு வைக்கப்பட்டுள்து.

இந்த ஆண்டில் மாரடைப்பு உயிரிழப்புகளை தடுக்க , இதய பாதுகாப்பு மருந்துகள் அனைத்து ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கூறியவாறு அனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மருத்துவப் பணியாளர்களின் பணி நேரம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் மூலம் தமிழகத்தில் 500 மருத்துவமனைகள் புதிதாக திறந்து வைக்கப்பட உள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் மூலம் புதிய மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Helath walk street திட்டம் மூலம் மாவட்ட தலைநகரங்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள 8 கி.மீ நீளம் கொண்ட சாலைகளை தேர்வு செய்ய உள்ளோம். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மக்களுடன் மருத்துவர்கள் இணைந்து நடைபயிற்சியில் ஈடுபடுவர். நடைபயிற்சியில் ஈடுபடும் மக்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனத்தை பயன்படுத்தாமல் பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா ,விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள் தரமானதா? போலி குளிர்பானங்கள் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்பராக் , குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்றால் அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து குட்கா ,பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் தமிழகத்தில் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும். நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை ஆணையர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனை குறித்த ஆய்வில் ஈடுபடும் அதிகரிகளுக்கு அரசியல் ரீதியாக யாரும் தடை ஏற்படுத்தினால் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளோம்.

தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி பள்ளிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.. தலா 10 கோடி மதிப்பில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லியில் இருந்து வந்தவுடன் முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்.

author avatar
Savitha