மோடி இருக்கும்வரை சீனாவால் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியாது – அமித் ஷா…!

0
130
#image_title

மோடி இருக்கும்வரை சீனாவால் ஒரு அடி நிலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியாது – அமித் ஷா…!

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லடாக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சீனா அத்துமீறி வருவதாகவும், அதை தடுக்க பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த வகையில், அசாமின் லக்கிம்பூர் தேர்தல் பேரணியில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “வங்கதேச எல்லையில் நடந்த ஊடுருவலை மொத்தமாக தடுத்து நிறுத்தி தேசிய பாதுகாப்பை உறுதி செய்திருப்பது பாஜக தான். கடந்த 1962 ஆம் ஆண்டு சீனா அத்துமீறிய சமயத்தில் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு உதவாமல் அப்போதைய பிரதமர் நேரு சென்று விட்டார்.

அதை நிச்சயம் அந்த மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது நடப்பது மோடி ஆட்சி. அதனால் தான் சீனாவால் நமது நிலத்தில் இருந்து ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிப்பு செய்ய முடியவில்லை. அதுமட்டுமல்ல டோக்லாமில் கூட நாம் அவர்களை பின்னுக்குத்தள்ளி உள்ளோம்” என கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அமித் ஷா, “பாஜக அரசு அசாம் மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஏனெனில் வடகிழக்கு மாநிலங்களின் இதயம் என்றால் அது அசாம் தான். அசாம் மாநில வளர்ச்சி என்பது இந்தியாவின் வளர்ச்சி. எனவே அசாமின் எதிர்காலத்திற்காக எங்கள் வேட்பாளர்களை வெற்றியடைய செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.