நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!!

0
83
#image_title

நெடுஞ்சாலைகளில் இருக்கும் விளம்பரப்பலகைகள்! தொடர்ந்து சாலைகளில் விழுவதால்  பயணிகள் அச்சம்!

 

நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் ராட்சத விளம்பரப்பலகைகள் அடிக்கும் காற்றுக்கு தொடர்ந்து பெயர்ந்து சாலைகளில் விழுவதால் சாலலயில் செல்லும் பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – சிங்கம்பெருமாள் கோவில் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் நெடுஞ்சாலை, வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலை, வாலாஜாபாத் – கீழச்சேரி நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் – மணிமங்கலம் நெடுஞ்சாலை, தண்டலம் – தக்கோலம் நெடுஞ்சாலை ஆகிய நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் வழியாக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர்.

 

இந்த நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் பிரம்மாண்ட தூண்கள் அமைத்து 40 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமான ராட்சத விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. விளம்பரப்பலகைகள் சாலைகளில் வைப்பதற்கு உச்ச நீதி மன்றமும், சென்னை உயர் நீதி மன்றமும் தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறியும் அனுமதி பெறாமலும் விளம்பரப்பலகைகள் வைப்பவர்களுக்கு மூன்று உண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனாலும் தடையை மீறு விளம்பரப்பலகைகள் வைக்கப்படுகின்றது. நெடுஞ்சாலையின் ஓரங்களில் இருக்கும் காலி இடங்கள், வீடுகள் மேல் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு இருக்கும்  விளம்பரப்பலகைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் அனுமதி பெறாமல் புதிது புதிதாக விளம்பரப்பலகைகள் வைக்கப்படுகின்றது. இது தவிர நெடுஞ்சாலைகளில் மருத்துவமனை, வீடு விற்பனை, அரசியல் நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள், கடை விளம்பரங்கள் போன்ற பலகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவது மட்டுமில்லாமல் விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.

 

சமீப நாட்களாக கோடை மழை காரணமாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் விளம்பரப்பலகைகள் முறிந்து விழுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றது. ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம், வல்லக்கோட்டை, மாத்தூர், ஓரகடம், படப்பை, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் சூரை காற்று வீசியதை அடுத்து ஓரகடம் மேம்பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த இராட்சத விளம்பரப் பலகை இரும்புத் தூணோடு பெயர்ந்து அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

விளம்பரப் பலகை மின்சார ஒயர்கள் மீது விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கீழே விழுந்த விளம்பரப் பலகை அகற்றப்பட்டது. இதனால் ஓரகடம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் இருக்கும் சர்விஸ் சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

 

இதே போல சூரைக்காற்று வீசியதில் சிங்கம்பெருமாள் கோவில்  நெடுஞ்சாலை தெரசாபுரம் பகுதியில் வழிகாட்டி பலகை பெயர்ந்து அந்தரத்தில் தொங்கியபடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியதை அடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் அந்தரத்தில் தொங்கிய வழிகாட்டி பலகையை அகற்றினர்.

 

இதைப் போலவே வல்லம், வல்லக்கோட்டை, எறையூர் ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான விளம்பரப் பலகைகளும், மேலும் 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் விளம்பரப் பலகைகளும் பெயர்ந்து விழுந்தன. பலத்த காற்று வீசியதில் படப்பை, ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் வைக்கப்படடிருந்த ராட்சத பேனர்கள் கிழிந்தது.