அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

0
68
#image_title
அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றில் இருந்து தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.
மேலும் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்பொழுது சென்னையில் வெள்ளம் மெல்ல மெல்ல வடிவத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அதாவது டிசம்பர் 12ம் தேதி முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நேற்று(டிசம்பர்11) 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அதாவது அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று(டிசம்பர்12) வரை 398.3 மி.மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 385.3 மி.மீ மழைதான் பதிவாகி இருக்கின்றது.
ஆனால் சென்னையில் வழக்கத்திற்கு மாறாக வடகிழக்கு பருவ மழையானது சற்று அதிகமாக அதாவது 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று(டிசம்பர்12) வரை 731.9 மி.மீ மழை பெய்ய வேண்டிய சென்னையில் சற்று அதிகமாக 1079 மி.மீ மழை பெய்துள்ளது” என்று அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.