இபிஎஸின் ரகசிய திட்டம் வெற்றி! சிக்கலில் ஓபிஎஸ்!!

0
138
epss-secret-project-wins-ops-in-trouble
epss-secret-project-wins-ops-in-trouble

இபிஎஸின் ரகசிய திட்டம் வெற்றி! சிக்கலில் ஓபிஎஸ்!!

அதிமுகவில் இரட்டை இலை சின்னத்திற்கான போட்டி தான் தமிழகத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றத்தில் தூங்கி கொண்டிருந்த அதிமுக பொதுக்குழு வழக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் தூசு தட்டப்பட்டு தற்போது பேசுபொருளாக உள்ளது. ஆனால் இடைக்கால மனுவிற்கு மட்டுமே உத்தரவு பிறப்பிக்கிறோம்.

பொதுக்குழு வழக்கில் மீண்டும் கை வைக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. நீங்கள் ஏன் ஒன்றாக கைகோர்த்து ஒரே வேட்பாளரை நிறுத்தக் கூடாது? எனக் கேட்டது.

அதற்கு எனது வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்க வேண்டும் என்று இபிஎஸ் கூறினார். இல்லை பொது வேட்பாளரை நிறுத்தலாம் என ஓபிஎஸ் தெரிவித்தார். இருவரும் முரண்டுபிடித்ததால் உச்ச நீதிமன்றம் புதிதாக ஒரு முடிவை எடுத்துள்ளது.

பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை முடிவு செய்யுங்கள் என உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் தனக்கு ஆதரவு இருப்பதை காட்டி இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற்றார்.

இந்த சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ்க்கு அல்வா சாப்பிடுவது போல தான். பெரும்பான்மை உறுப்பினர்கள் தன் வசமிருப்பதால் அதிமுக வேட்பாளரை ஒருமனதாக ஏற்கிறோம் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டு தலைமை கழகத்தில் ஒப்படைக்க உத்தரவு பறந்துள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும் எனவும் இதனை மாவட்ட செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார். இதன் மூலம் கச்சிதமாக காய் நகர்த்தியுள்ளார் இபிஎஸ்.

பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் அளிக்க எடப்பாடி தரப்பு தயாராகி விட்டது. தனக்கிருக்கும் ஆதரவு வட்டத்தை வைத்து ஒன்றுமே செய்ய இயலாது என்பது ஓபிஎஸ்க்கே புரிந்திருக்கும். இபிஎஸ் தேர்வு செய்த வேட்பாளரின் கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கையெழுத்து போட வேண்டும். அந்த சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம் என அவர் நினைத்திருக்க, ஓபிஎஸ் கையெழுத்து போடவில்லை எனில் இபிஎஸ் தரப்பு நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடிவிடும்.

ஆனால் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. பிப்ரவரி 7ம் தேதிக்குள் இதனை கச்சிதமாக முடித்தால் தான் பிரச்சாரக் களத்தில் எந்தவித சிக்கலும் ஏற்படாது. அதுமட்டுமின்றி இரட்டை இலை சின்னத்தை முடக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதால் இபிஎஸ் தரப்புக்கு வாய்ப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பொதுக்குழுவின் ஆதரவை காட்டி இரட்டை இலையை தன் வசப்படுத்தி விடலாம். ஆனால்இதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்க ஓபிஎஸ் விரும்பவில்லை.

இரட்டை இலை எடப்பாடிக்கு கிடைத்து விட்டால் அதற்கு எதிராக வாக்கு சேகரிக்க வேண்டிய நிலை வந்துவிடும். அது புதிய சிக்கலை உண்டாக்கும். எனவே அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மீது நம்பிக்கை இல்லை என நீதிமன்றத்தில் அந்தர் பல்டி அடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K