கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.?
கரோனோ வைரஸை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதியை ஒதுக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக கூறியுள்ளார்.
சீனாவின் வூகான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி 7000 மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அந்தந்த நாட்டு அரசுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டாய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றுக் கிருமிக்கு இதுவரை மூவர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் கரோனா தொற்று அறிகுறி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் நடிகைகள் விழிப்புணர்வு மற்றும் கரோனாவில் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை பேசியும், வீடியோவாக வெளியிட்டும் வருகின்றனர்.
கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் 20,000 கோடியை அறிவித்துள்ளார். இதன்மூலம் குடும்பஸ்ரீ திட்டத்தின் கீழ் வரும் குடும்பங்களுக்கு ரூ.2000 கோடிக்கு கடன் வழங்குவதோடு, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கப்படுகிறது. முதியோர்களுக்கு முன்கூட்டியே இரண்டு மாத ஓய்வூதிய தொகை அவர்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.1320 கோடி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு சார்பில் உணவகங்கள் திறக்கப்பட்டு மாநிலம் ரூ.20 க்கு உணவு வழங்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒருமாத கால அவகாசம் வழங்குவதாகவும், ரேசன் பொருட்கள் ஒரு மாதம் இலவசமாக வழங்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.