அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் தீர்மானம் – நடந்தது என்ன?
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு 38 ஊராட்சிகள் உள்ளன.
இதில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் 25 ஊராட்சிமன்ற தலைவர் இடங்களை திமுக சார்ந்தவர்களும் 13 இடங்களை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் பிடித்துள்ளன.
கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் இந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் S.S.அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர்.இராமச்சந்திரன் அவர்கள் தன்னிச்சையாக சரவணன் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக அறிவித்துள்ளார்.
38 ஊராட்சி மன்ற தலைவர்களில் 13 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுவிட்டு தற்போது அமைச்சர் தன்னிச்சையாக ஒரு நபரை நியமிப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று கூறி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் அவர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அதிமுக ஒன்றிய செயளாலர் அரசு வாகனத்தை தவறுதலாக பயன்படுத்தி வந்தது குறித்து மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.