Monday, November 18, 2024
Home Blog Page 5075

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

0

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

தற்போதைய விலைவாசி ஏற்றத்தில் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு பில்லை பார்த்தால் பகிரென இருக்கும். அந்த அளவுக்கு ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு உணவகம் உணவை சாப்பிடுவதற்கு சம்பளம் தருகிறது என்ற ஆச்சரியமான செய்தி வெளிவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டபோடில் என்ற உணவகம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சுவைமிகுந்த உணவை வழங்க வேண்டும் என்பதற்காக உணவை சுவை பார்த்து அதில் உள்ள குற்றம் குறைகளை கண்டுபிடித்து சொல்வதற்காகவே சில ஊழியர்களை நியமிக்க உள்ளது. இந்த ஊழியர்களுக்கு 129 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் ஒன்பது ஆயிரம் சம்பளம் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த பணிக்காக நியமிக்கப்படும் பணியாளர்களை ஓட்டலில் தயாராகும் டீ, காபி, நொறுக்குத்தீனிகள் உள்பட ஒவ்வொரு உணவையும் சுவைத்து அதன் நிறை குறைகளை அறிந்து, அதன் பின் அந்த உணவின் தரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஊழியர்களுக்கு ஒன்பது ஆயிரம் ரூபாய் சம்பளம் மட்டுமின்றி தங்குமிடமும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தங்களது உணவகங்களில் தயாராகும் உணவகங்கள் தயாராகும் உணவுகள் அனைத்தும் எந்தவித குறையும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் செல்லும் என்பதும் இங்கிலாந்து நாட்டிலேயே சிறந்த உணவகம் என்ற பெயரை எடுக்க இந்த ஊழியர்கள் உதவுவார்கள் என்றும் இந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஓட்டலில் உணவை சாப்பிடுவதற்கு சம்பளம் தருவது மட்டுமின்றி தங்கும் இடமும் இலவசமாக கொடுக்கும் இந்நிறுவனத்தில் வேலையில் சேர பலர் போட்டி போட்டு வருகின்றனர் என்பதும் இந்த ஓட்டலில் வேலைக்கு சேர்பவர்கள் குறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஓட்டலின் நிர்வாகம் அறிவிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

0

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருப்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர் “ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்) ஆகியவற்றில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அவற்றின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வந்த நிலையில், மத்திய மனிதவளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் அண்மையில் தில்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிலைக்குழுவின் தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் சமூகநீதித் துறை அமைச்சராக இருந்தவருமான சத்தியநாராயண் ஜாட்டியா, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்.களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆணையிட்டிருக்கிறது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே மக்கள்தொகை அடிப்படையிலான இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 49.50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டிகளில் வெறும் 12% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கூட நுழைவுநிலை பணிகளான உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டும் தான் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு சேர்த்து மொத்தமாக 12.40 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டியில் மொத்தமுள்ள 684 ஆசிரியர் பணிகளில் 599 பணிகள், அதாவது 88% இடங்கள் உயர்சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 66 இடங்கள்(9.64%), பட்டியலின வகுப்பினருக்கு 16 இடங்கள்(2.33%), பழங்குடியினருக்கு 3 இடங்கள் (0.43%) மட்டுமே கிடைத்துள்ளன. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தால் அவை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்படுவது தான் கொடுமையாகும். 2018&ஆம் ஆண்டில் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 682 பேரில் 16 பேரும், 2019-ஆம் ஆண்டில் 271 பேரில் 5 பேரும் மட்டும் தான் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் என்பதிலிருந்தே ஐ.ஐ.டிகளில் சமூகநீதி எந்த அளவுக்கு படுகொலை செய்யப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.

ஐ.ஐ.எம்.களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இந்தியாவில் மொத்தம் 18 ஐ.ஐ.எம்கள் உள்ளன. அவற்றில் 16 நிறுவனங்களின் இட ஒதுக்கீட்டு விவரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 16 ஐ.ஐ.எம்.களில் 90% ஆசிரியர் பணிகள் உயர்சாதியினருக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த 16 ஐ.ஐ.எம்.களிலும் பழங்குடியினர் ஒருவர் கூட ஆசிரியராக இல்லை. 12 நிறுவனங்களில் பட்டியலின ஆசிரியர்களே இல்லை. 7 நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. ஐ.ஐ.எம்.களில் இடஒதுக்கீடு இன்னும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அந்த அளவுக்கு அங்கு சமூகநீதி முளையிலேயே கருக்கப்படுகிறது.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 49.50% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் கூட, ஐ.ஐ.டிகளும், ஐ.ஐ.எம்.களும் இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கு மூல காரணம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1970-களில் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை பிறப்பித்த ஆணை தான். அந்த ஆணையில் தொழில்நுட்ப பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கூறப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி, ஐ.ஐ.டிகளும், ஐ.ஐ.எம்.களும் 40 ஆண்டுகளாக சமூகநீதியை மறுத்து வருகின்றன. ஆனால், இப்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையில், கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை பொருட்படுத்த தேவையில்லை என்றும், இப்போதுள்ளவாறு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால் ஐ.ஐ.டிகளிலும், ஐ.ஐ.எம்.களிலும் இனி சமூகநீதி படுகொலை செய்யப்படாதே தவிர, இதுவரை படுகொலை செய்யப்பட்டது, செய்யப்பட்டது தான். இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த பல ஆண்டுகளுக்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாமல் போகலாம். எனவே, கடந்த காலங்களில் சமூகநீதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும். அதற்காக ஐ.ஐ.டிகள் மற்றும் ஐ.ஐ.எம்.களில் எத்தனை பணியிடங்களை பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கினால் அவர்களுக்கு முறையே 27%, 15%, 7.5% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படுமோ, அத்தனை பணியிடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும். அவை அனைத்தையும் பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, அவற்றை முழுக்க முழுக்க இடஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும். அது தான் சமூகநீதியை தழைக்கச் செய்ய ஒரே வழியாகும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

0

கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணை மதம் சார்ந்த உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை என்பது ஒரு மதத்திற்கான வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மத வழிப்பாட்டு தளங்களுக்கு கிடையாதா?
இதன் மூலம் கோவில் நிலங்களை விற்க இந்து அறநிலையத்துறையை தமிழக அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனளிக்கும்? என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வேதனை தெரிவித்தனர்.

மீண்டும் இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்

0

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுவிதமான தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமைந்து ஒரு திராவிட கட்சி ஆளும் கட்சியாகவும் இன்னொரு கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்து இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை ஒரே நேரத்தில் சந்திக்கும் கூட்டணி ஒன்றை அமைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்று கூட்டணி தேவை என எதிர்பார்க்கும் மக்களுக்கு இந்த கூட்டணி ஒரு மாற்றாக இருக்குமா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்

இந்த நிலையில் ரஜினி கமல் கூட்டணியை அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதில் இருந்தே மக்களின் ஆதரவு இந்த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே ரஜினி கமல் கூட்டணி குறித்து முதலமைச்சர் முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் கிட்டத்தட்ட விமர்சனம் செய்துவிட்ட நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்களும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தவறான ஒன்று என்பது எனது கருத்து என்றும் 2021 ஆம் ஆண்டில் ’அதிசயம் நிகழும்’ என்ற சினிமா வேண்டுமானால் வரும், ஆனால் எந்த அதிசயமும் நிகழாது என்றும் கூறியுள்ளார்

கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்து கமல் ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி கூறியவாறு உண்மையில் அதிசயம் நிகழுமா? அல்லது கே.எஸ்.அழகிரி கூறியவாறு அந்த பெயரில் ஒரு திரைப்படம்தான் வருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன்

0

21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங், வயது 21,. ராஜஸ்தான் சட்ட பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்தவுடன் ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கூடிய விரைவில் அவருக்கு நீதிபதி பணி ஆணை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இது குறித்து இளம் நீதிபதியாக பதவி ஏற்கவுள்ள மயங்க் பிரதாப் சிங் கூறிய போது, “நீதிபதிகளுக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கண்டு நீதித்துறை சேவை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனால் தான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன் என்று தெரிவித்தார்.

நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது முன்பு 23 ஆக நிர்ணயித்தது. இதனை ராஜஸ்தான் அரசு இந்த ஆண்டு முதல் 21 வயதாக குறைத்தது. இதன் மூலம் துடிப்பான மாணவர்கள் இளம்‌ வயதில் உயர்ந்த கவுரவத்தை பெற வழி வகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் குடும்ப பெண்ணாக மாற போகும் நிக்கி கல்ராணி! யார் அந்த அதிர்ஷ்டசாலி

0

விரைவில் குடும்ப பெண்ணாக மாற போகும் நிக்கி கல்ராணி! யார் அந்த அதிர்ஷ்டசாலி

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் பட்டியலில் ஒருவர் தான் நிக்கிகல்ராணி. அவர் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்தவர். முதலில் மலையாள படத்தில் அறிமுகமான இவர் பின்னர் தமிழில் ஜி.வி பிரகாஷீடன் டார்லிங் என்னும் படத்தின் மூலம் அழகிய பேயாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர்,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ்ப் திரையுலகில் பிரபலமானர். தற்போது கன்னட,மலையாள படங்களிலும் அவர் நடித்து கொண்டிருக்கிறார்.அனைவர் மனதையும் கவர்ந்த நிக்கிகல்ராணி அவர் மனதை கவர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும் தற்போது கூறியிருக்கிறார்.

இதனையடுத்து இன்னும் 3 வருடத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.அவர் காதலர் யார் என்ற கேள்விக்கு “நான் சென்னையை சேர்ந்த ஒருவரை தான் காதலிக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை பற்றிய முழு விவரமும் தெரிவிக்காமால் ரகசியமாக வைத்துள்ளார் நிக்கி கல்ராணி.

இதனை அறிந்த அவருடைய ரசிகர்கள் இனிமேல் அவர் நடிப்பாரா மாட்டாரா? என்ற மன வருத்தத்தில் உள்ளனர். ஏனென்றால் நஸ்ரியா,சமந்தா போல இவரும் திருமணத்திற்கு பின்பு நடிப்புக்கு குட் பை சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிக்கி கல்ராணி தற்போது ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் படி 2 மலையாள படங்களிலும் 1தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

0

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்தவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டதை அடுத்து அண்ணன் பிரதமராகவும் தம்பி அதிபராகவும் பதவியேற்று இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்

இந்த நிலையில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் வட கிழக்கு மாகாணப் பகுதியில் ஆளுநராக ஒரு தமிழரை நியமனம் செய்ய கோத்தபயா ராஜபக்சே முடிவு செய்ததாகவும் ஆனால் இந்த முடிவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த தமிழர் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2009-ம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது இனப்படுகொலை நடைபெறவில்லை என்று அறிவித்தவர் முத்தையா முரளிதரன் என்பதால் அவர் தமிழராக இருந்தாலும் அவருக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தங்கள் பகுதியில் ஆளுநராக அவரை நியமனம் செய்யக்கூடாது என்று தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது

இருப்பினும் வட கிழக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நேயமிக்க கோத்தபயா ராஜபக்சே முடிவு செய்துவிட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே கோத்தபயா ராஜபக்சே அதிபராகி உள்ளது தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் முத்தையா முரளிதரன் ஆளுநராக இருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

0

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியல்ரீதியாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் நடந்த ‘கமல்ஹாசன் 60’ விழாவில் இருவரும் கலந்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது

இதனையடுத்து இருவரும் அடிக்கடி பொதுவிழாவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதை போல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ள போவதாகவும், இந்த மேடையிலும் அரசியல் பேச்சுக்கள் அனல் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமல், ரஜினி சேரக்கூடாது என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தற்போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் முன் அவர் குணமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் டிசம்பர் 7ஆம் தேதி ‘தர்பார்’ இசை விழாவை நடத்த முடிவு செய்திருப்பினும் அதற்கு முன்னரே இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடலை ரிலீஸ் செய்ய படகுழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பதும், அனிருத் இசையமைத்த இந்த பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மக்கள் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி: சிவசேனா பாஜகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் அதிரடி

0

மக்கள் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி: சிவசேனா பாஜகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் அதிரடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க இழுபறி நீடித்து வரும் நிலையில் மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் சிவசேனா மற்றும் பாரதீய ஜனதாவுக்கு இந்து அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளன.

இது குறித்து புனேயை சேர்ந்த சமஸ்தா இந்து அகாடி அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போதே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டு 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் விரைவில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்துக்காக இரு கட்சிகளும் இப்படி சண்டையிட்டுக் கொள்வது மக்கள் அவர்கள் கூட்டணிக்காக அளித்த தீர்ப்பை அவமதிப்பதாகும்.

சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் கொள்கை ரீதியாக வேறுபட்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை எதிர்ப்பதற்காக இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்துள்ளன.

மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா ஆட்சிக்கு வந்தால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். நாங்களும் விவசாயிகள் மீது அக்கறை வைத்துள்ளோம்.

இந்த கட்சிகளில் ஏதேனும் ஒன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை உருவாக்கினால், நாங்கள் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். மேலும் அவர்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

சமஸ்தா இந்து அகாடி தவிர இதற்காக மேலும் 6 இந்து அமைப்புகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளன. இந்து அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடேவும் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார் என்றும் அவர் அப்போது கூறினார்.

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

0

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

அயோத்தியால் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

ஆனால் இந்த சந்திப்பை இரு தரப்பினர்களும் உறுதி செய்யவில்லை. மேலும் சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டு பகிரப்படும் புகைப்படமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்தது என்றும் எனவே இந்த செய்தி சமூகவலைத்தள பயனாளிகளால் பரப்பப்படும் வதந்தி என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளால் பல்வேறு விளைவுகள் ஏற்படுவதால் இதுபோன்று போலி செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது