Monday, November 18, 2024
Home Blog Page 5081

மீண்டும் முதல்வர் வேட்பாளரா? அல்லது துணை முதல்வரா? பக்கா பிளானுடன் களத்தில் இறங்கிய அன்புமணி

0

மீண்டும் முதல்வர் வேட்பாளரா? அல்லது துணை முதல்வரா? பக்கா பிளானுடன் களத்தில் இறங்கிய அன்புமணி

பாமக சார்பாக கட்சியை வளப்படுத்தும் வகையில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முப்படைகளின் தொண்டர்களுடன் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினார்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் முப்படைகளின் இந்த சந்திப்பை தொடங்கிய அன்புமணி ராமதாஸ், இனி வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு இந்த முப்படைகளின் தொண்டர்களுடன் கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது.

அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும்,கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தவும் பாமகவின் சார்பாக அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை ஆகிய மூன்று படைகள் பாமகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சிக்கென குறிப்பிட்ட அளவு நிலையான வாக்கு வங்கி இருந்து வந்தாலும் அக்கட்சியால் தேர்தல் அரசியலில் பெரியதாக ஜொலிக்க முடியவில்லை. தொடர்ந்து ஏதாவது ஒரு பெரிய கட்சியின் ஆதரவுடன் தான் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை போக்கும் வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனியாக களம் கண்டது.

இதன் மூலமாக குறிப்பிட்ட வாக்குவங்கியை உறுதி செய்து தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பதை நிரூபித்து நிலையில் அக்கட்சியால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. இதனையடுத்து தற்போது நடந்த மக்களவை தேர்தலில் தமிழக அரசியல் தலைவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து போட்டியிட்டது. இதிலும் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமகவின் வாக்குகள் பெரிதும் உதவியது. அடுத்து தற்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற பாமக வாக்குகள் பெரிதும் உதவியது.

இந்நிலையில் தான் அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாமக கூட்டணி தொடரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி செய்தார். கூட்டணி தொடரும் நிலையில் இதன் மூலமாக உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட மாநகராட்சி மேயர் பதவிகளையும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி என்ற கோரிக்கையையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் பாமக தரப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாய்ப்பு கிடைக்கும் நிலையில் பாமக நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ள தொகுதிகளில் தங்களது வெற்றியை உறுதி செய்யும் வகையில் தான் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை பட்டை தீட்டி வரும் சட்டமன்றத் தேர்தலில் கிராம வாரியாக களத்தில் இறக்க பாமக தலைமை முடிவு செய்திருக்கிறது.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இந்த முப்படைகளை சேர்ந்தவர்களுடன் இன்று கலந்துரையாடல் நடத்திய அன்புமணி ராமதாஸ் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணியின் பாசிட்டிவான பேச்சைக் கேட்டு அதில் கலந்து கொண்ட இந்த முப்படைகளின் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகம் ஆகினர்.

இதனையடுத்து வடதமிழகத்தில் 75 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்து அங்கு மட்டும் இந்த முப்படைகளை இறக்கி முழு வீச்சில் செயல்பட பாமக தலைமை திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த முப்படைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த முப்படைகளில் அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்லாமல், பாமகவின் மது ஒழிப்பு,மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகள்,நாகரிக அரசியல் உள்ளிட்ட சித்தாந்தங்கள் மீது பற்று கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் இணைக்க கட்சி மேலிடம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தாங்கள் கேட்டவாறு ஆட்சியில் பங்கு மற்றும் அன்புமணி ராமதாசுக்கு துணை முதல்வர் பதவி என்பதை ஏற்று கொண்டால் அதிமுக கூட்டணியில் தொடரலாம் இல்லையென்றால் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் களமிறங்கலாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கேட்கும் ஸ்டாலின்

0

காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கேட்கும் ஸ்டாலின்

தமிழக காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடந்ததாக எழுந்துள்ள குற்ற சாட்டு சம்பந்தமான வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரிக்க வேண்டும், ஊழல் செய்தவர்களுக்கு சரியான தண்டனை பெற்றுத் தந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக உள்துறைச் செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக இன்று வெளிவந்திருக்கும் செய்தி, அதிமுக அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் வெட்கம் ஏதுமின்றி முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஊழல் புகாருக்குள்ளான டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள காவல்துறை தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.,யை அதே பதவியில் வைத்துக் கொண்டு, இந்த ஊழல் தொடர்பான அலுவலகக் கோப்புகளை பத்திரமாக வைத்திருந்த அமைச்சுப் பணியாளர் ராஜாசிங்கை மட்டும் திடீரென்று ராமநாதபுரத்திற்கு மாற்றியிருப்பது ஆதாரங்களை அழிக்கும் முதற்கட்ட முயற்சியோ என்ற வலுவான சந்தேகம் எழுகிறது.

காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் உள்ள எஸ்.பி – அவருக்கு ஆணையிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதிமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமை உள்ள தமிழக காவல்துறையையும் ஊழல் துறையாக மாற்றி வருவது கண்டனத்திற்குரியது.

2019 ஜனவரி மாதத்தில் வெளிவந்த இந்த ஊழல் புகார் குறித்து, ‘குட்கா’ ஊழல் வழக்கில் ரெய்டு செய்யப்பட்ட தமிழ்நாடு காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெறும் வரை, எந்த விசாரணையும் நடத்தாமல் கிடப்பில் போட்டார்.

பிறகு புதிய டிஜிபி திரிபாதி பொறுப்பேற்ற பிறகு இந்த ஊழலை விசாரிக்குமாறு உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி – அந்த கடிதத்தின் அடிப்படையில் செப்டம்பர் 2019-ல் விசாரணைக்கு உத்தரவிட்டார் உள்துறைச் செயலாளர்.

ஆனால், ஏறக்குறைய 11 மாதங்களாக இந்த புகார் மீது எந்த விசாரணையும் நடக்கவில்லை. அதிமுக அரசு ஊழல்வாதிகளை எப்படியாவது காப்பாற்றுவது இயற்கை. அதில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை. ஆனால், சுதந்திரமாக செயல்பட வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையும் – அதில் நேர்மையானவர் என்று காவல்துறை வட்டாரத்தில் அறியப்படும் இயக்குநர் விஜயகுமார் ஐபிஎஸ்-சும் ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றுவது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.

ஊழல் நடவடிக்கை எடுக்க உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டும், ஏன் கோப்பினை மூட்டை கட்டி வைத்திருக்கிறார்? ஒரு அரசு ஊழியர் மீது புகார் வந்து விட்டாலே, அவரை வேறு பதவிக்கு மாற்றுமாறு அரசுக்கு அறிவுறுத்தும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, ஏன் காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய புகாரில் ஈடுபட்ட அதிகாரிகளை மாற்ற இதுவரை அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை?

நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்த வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை இப்படி ஏனோ அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பாக மாநில விஜிலென்ஸ் ஆணையத்தின் தலைவர் பதவியையும் தன்னிடமே வைத்துள்ள தலைமைச் செயலாளர், இந்த மெகா ஊழல் பற்றியும், லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் தாண்டவமாடும் அரசியல் தலையீடு குறித்தும் கண்டு கொள்ளாமல், மவுனமாக இருப்பது ஏன்?

இதேபோல், குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு தமிழக அதிகாரிகள் மீது ‘குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய’ மத்திய விழிப்புணர்வு ஆணையம் அனுமதி கேட்டும், இதுவரை அதிமுக அரசு அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

அதிமுக அரசு தமிழகத்தில் ஊழலாட்சி நடத்தி வருவதும்; அதைக் கண்டு கொள்ளாமல், ஏதோ காரணங்களுக்காக அதிமுக அரசைக் காப்பாற்றுவதும்; இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்பட்டிருக்கும் மகா கேடு என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் காவல்துறையிலேயே ஊழல் செய்த பெருச்சாளிகளைப் பிடித்துக் கொண்டுவந்து, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு மட்டுமின்றி – ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நம்பகத்தன்மையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலாளர் ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையாக விசாரணை நடத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

0

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவற்றை பாதுகாக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1250-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் எந்தவித பாரமரிப்பும் இல்லாமல், வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும், வெட்ட வெளியிலும் குப்பைகளைப் போல கிடத்தி வைக்கப்பட்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. உலகப்புகழ் பெற்ற சிலைகளுக்கும், பிற கலைச் சின்னங்களுக்கு சென்னையில் பாதுகாப்பு மிக்க ஓர் இடம் ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள சிலரின் வீடுகளிலும், பண்ணைத் தோட்டங்களிலும் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனைகளில் ஏராளமான பழங்கால சிலைகள், கற்சிலைகள், மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஏராளமான தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் மதிப்பு பலநூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்தகைய சிலைகள் அவற்றுக்குரிய மதிப்புடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிண்டியில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகம் அமைந்துள்ள பொருளாதாரக்குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தின் தரைத்தளத்தில் எந்தவித பாதுகாப்புமின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு பலநூறு கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிலைக்கடத்தல் மற்றும் சிலை பதுக்கல் தொடர்பான வழக்குகளுக்கு அவை தான் முக்கிய ஆதாரம் ஆகும். ஆனால், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அவை வைக்கப்பட்டுள்ள நிலையைப் பார்க்கும் போது, அவற்றை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்றே தோன்றுகிறது. இது சிலைகளுக்கு மட்டுமின்றி, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த ஆபத்து தடுக்கப்பட வேண்டும்.

வெட்ட வெளியில் எந்த பாதுகாப்புமின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகள் வெயிலிலும், மழையிலும் கிடக்கும் போது அவை பல்வேறு வேதிவினைகளுக்கு உள்ளாகும். இதனால் சிலைகள் அழகையும், சிறப்பம்சங்களையும் இழந்து சாதாரணமான கற்களாகவும், மரத்துண்டுகளாகவும் மாறிவிடக்கூடும். மழையில் நனைந்து, வெயிலில் காயும் போது மரச்சிலைகளில் வெடிப்பு ஏற்படும். இந்த சிலைகளில் உள்ள சிறப்பம்சங்களுக்காகத் தான் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சிலைகளை அலட்சியத்தால் இழந்து விடக் கூடாது.

குற்ற வழக்குகள், கடத்தல் வழக்குகள் ஆகியவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர ஊர்திகள், மகிழுந்துகள், சரக்குந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் கதி என்ன? என்பதை அனைவரும் அறிவார்கள். அவை வெயிலிலும், மழையிலும் கிடந்து துருப்பிடித்து வீணாகின்றன. பல வாகனங்களின் சக்கரங்கள், எஞ்சின்கள் கூட திருடப்படுகின்றன. இவ்வாறாக மிகப்பெரிய அளவிலான பொருளாதாரம் யாருக்கும் பயன்படாமல் போகும். விலைமதிப்பற்ற சிலைகளுக்கும் அதே நிலை ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் விலை மதிப்பற்றவை என்பது மட்டுமின்றி, கலைநயமும் மிக்கவை ஆகும். ஆகவே, இந்த சிலைகளைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம் அமைத்து, ஒவ்வொரு சிலையின் வரலாற்றையும் அதற்கு அருகில் இடம் பெறச் செய்தால் அது அனைவரின் வரவேற்பையும் பெற்று, சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட இடமாக மாறக்கூடும். அத்தகையக் கலைக்கூடம் சென்னையின் இன்றையத் தேவையும் கூட. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை பாதுகாத்து வைக்க திருவான்மியூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அம்முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கடைசியாக கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் முறைப்படி விண்ணப்பித்து அதை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.

உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவை பராமரிப்பின்றி சீரழிவதை அனுமதிக்கக்கூடாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைப்படி பெற்று, அதில் அருங்காட்சியகம் அமைத்து விலைமதிப்பற்ற சிலைகளை பாதுகாக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

0

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் என தொடர்ச்சியாக தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர்களில் நடித்து வந்தார்.

தற்போது கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்திலும், பொன்மகள் வந்தாள் என்ற படத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்த நிலையில் கத்துகுட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் கதைப்படி ஹீரோவின் தங்கை கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், அந்த கேரக்டரில் தான் ஜோதிகா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் தொடங்கவுள்ளது.

திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! அதிர்ச்சியில் திமுக தலைமை

0

திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! அதிர்ச்சியில் திமுக தலைமை

திமுக எம்.பி கனிமொழி வெற்றிக்கு எதிராக அப்போதைய தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தவரும்,தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டவருமான தற்போதைய தெலுங்கானா ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தற்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பதில் தூத்துக்குடி வாக்காளர் தொடர்ந்து நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்ற பின் தங்களுக்கு இந்த வழக்கால் பெரிய பிரச்சினை இருக்காது என்று எதிர்பார்த்திருந்த திமுக தலைமைக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்றார். கனிமொழியின் இந்த வெற்றியை எதிர்த்து முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவில், கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் குடிமகன்கள். அவர்கள் வருமான விவரங்கள் பொருந்தாது என்று வேட்பு மனுவில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் கனிமொழி சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் சான்றிதழ்களை இணைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் இணைக்க வில்லை. அவருடைய வேட்பு மனு குறைபாடுடையது. எனவே அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் கனிமொழிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற்றார். இதனால் திமுகவிற்கு வரவிருந்த பிரச்சினையும் தீர்ந்தது என அக்கட்சியின் தலைமை நிம்மதி அடைந்தது. ஆனால் இது குறித்து பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, அந்த தொகுதி வாக்காளரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கனிமொழிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அப்போது வழக்கைத் திரும்பப் பெற்றதால், தமிழிசை வழக்கு செலவை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் வழக்கு வாபஸ் பெற்றதாகத் தெரிவித்து அவரது இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.ஆனால் கனிமொழிக்கு எதிரான இந்த வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்று நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??!

0

சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??!

அயோத்தி வழக்கு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியான நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வு அடுத்து  சபரிமலை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளில் நவம்பர் 17 ஆம் தேதிக்கு முன்பு தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள வெளியாகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்து.

இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சபரி மலையின் நம்பிக்கையில் தலையிடும் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட் மனுவை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வெள்ளிக் கிழமைக்குள் எப்போது வேண்டும் என்றாலும் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக பிரச்சினையில் உள்ள தற்போது தீர்ப்பு வெளியான அயோத்தி விவகாரம் போலவே சபரிமலை பிரச்சனையில் பாஜக முக்கிய இடம் பெறுகிறது. ஏனெனில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதை எதிர்த்து கடந்த ஆண்டு பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதனால் சபரிமலையில் கடந்த ஆண்டு சீசனில் தொடர் போராட்ட களமாக இருந்தது.

சிவன் மற்றும் விஷ்ணுவின் பெண் அவதாரம் மோகினி ஆகியோரின் மகனாகக் கருதப்படும் சபரிமலையில் உள்ள அய்யப்பன் சுவாமியை பல்வேறு மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். அய்யப்பன் சுவாமியின் பிரம்மச்சாரியம் காரணமாக மாதவிடாய் காரணமாக வயதுக்கு வந்த பெண்களை கோவிலின் வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்பது பக்தர்களின் பல ஆண்டுகள் நம்பிக்கை ஆகும். சிறு வயது பெண் குழந்தைகள் அல்லது முதியோர்களுக்கு அனுமதி உண்டு.

அய்யப்ப பக்தர்களின் இந்த நம்பிக்கைக்கு 1991 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரி மலைக்குள் நுழைவதைத் தடை செய்ததால் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில் காலங்காலமாக பின்பற்றி வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 6 பெண் வழக்கறிஞர்கள், பெண்களுக்கு சபரிமலையில் விதித்த தடையை எதிர்த்து 2006 ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளையும் சாரத்தையும் மீறுவதாக தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றம், கடந்த 2018 ஆண்டு செப்டம்பர் மாதம், 1991 ஆம் ஆண்டில் கேரளா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்தது.

அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு எதிரான இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக, பெண்களை நுழைய விடாமல் சபரிமலையில் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இன்னும் சில நாட்களில் தீர்ப்பு அளிக்க உள்ளது.

மேலும் சபரிமலை சீசன் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு எதுவாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. பெண்களை அனுமதித்தாலும் அனுமதிக்கவில்லை என்றாலும் இந்த வருடமும் சர்ச்சைக்களுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு 17 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து சபரிமலை கோயிலுக்கு கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல பூஜை காலத்தில் 23 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்தர்களின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன்

0

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன்

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரையுலகை சேர்ந்தவர்கள் குறிப்பாக நடிகர்கள், நடிகைகள் அரசியலுக்கு வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் பெரும்பாலான நடிகர்கள் வந்த வேகத்தில் மீண்டும் அரசியலைவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். அல்லது மக்களின் ஆதரவு இன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடிகர்களின் அரசியல் இனி எடுபடாது என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், ‘இன்றைய சூழலில் அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. நடிகர்களுக்கு அரசியலில் எந்த அளவு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று நான் கருதுகிறேன். எம்ஜிஆர் அவர்களை போல் பெரிய தாக்கத்தை இன்றைய நடிகர்கள் ஏற்படுத்த முடியாது என்ற முதல்வரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்’ என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திருமாவளவன் கூறியதுபோல் இதுவரை அரசியலுக்கு வந்த பெரிய நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பவன்கல்யாண், உள்பட எந்த நடிகர்களும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறையை ரஜினிகாந்த் அவர் போக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

0

தருமபுரி எம்பி செந்தில்குமார் நாடாளுமன்ற உறுப்பினரா? நாலாந்தர அரசியல்வாதியா? ட்விட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறேன் என்ற பெயரில் சில பதிவுகளை போடுவதும் அதை மாற்று கட்சியினர் விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இவ்வாறு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்களை பிளாக் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகமாக பிளாக் செய்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் இவருக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்றும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

அரசியல் விளம்பரத்திற்காக ஆரம்பித்த இவரது ட்விட்டர் பதிவுகள் நாளடைவில் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்து ஒரு நாலாந்தர அரசியல்வாதியை போல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் விமர்சனம் செய்து விளம்பரம் தேடிக் கொள்வது வரை வந்தது. அரசியலில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் நிச்சயமாக இருக்கும் ஆனால் அது ஒரு தலைவரின் பதிவில் போய் பின்னூட்டம் இடும் அளவிற்கு கீழ் தரமாக இருக்க வாய்ப்பில்லை.

ஒரு அரசியல் தலைவரின் கருத்து குறித்தோ அல்லது அவரை பற்றியோ விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் தனியாக ஒரு அறிக்கை அல்லது ட்விட்டர் பதிவுகளாக வெளியிடலாம். ஆனால் தருமபுரி எம்பி செந்தில்குமார் தொடர்ந்து பாமக நிறுவனரின் ட்விட்டர் பதிவுளில் விமர்சனம் செய்து தனக்கான விளம்பரத்தை தேடி கொண்டிருந்தார்.

இந்நிலையில் தான் பாமக இணையதள தொண்டர்கள் தருமபுரி பகுதியில் செந்தில்குமார் எம்பியின் குடும்பம் வன்னியர் சங்க சொத்தை அபகரித்து விட்டதாக குற்றசாட்டை வைத்தனர். இதனையடுத்து பாமக நிர்வாகிகளும் இந்த குற்றசாட்டு குறித்து ஊடகங்களுக்கு முறையான விளக்கமளித்தனர். இதனால் பதறி போன திமுக தலைமை கொஞ்ச காலம் எம்பியை அமைதியாக இருக்க கட்டளையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கொஞ்ச காலம் அமைதியாக இருந்த செந்தில்குமார் எம்பி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆளும் கட்சியை சார்ந்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றும் பாலியல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரை விமர்சனம் செய்யும் வகையில் டாக்டர் செந்தில்குமார் எம்பி ட்விட்டரில் பதிவிட்ட கருத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அவரை நம்பி வாக்களித்த தொண்டர்களே அவரும் ஒரு நாலாந்தர அரசியல்வாதி தான் என விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

மாஃபா பாண்டியராஜன் குறித்து திமுக எம்பி செந்தில்குமாரின் ட்விட்டர் பதிவு:

இவருடைய இந்த பதிவிற்கு எதிராக எழுந்த கருத்துக்கள் இது வரை மறைத்து வந்த திமுகவின் வரலாற்றை ஆரம்பம் முதல் தற்போது வரை அனைத்தையும் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அவற்றில் சில பதிவுகள்.

https://twitter.com/m198029/status/1194301000271699968

தற்போது சுயமரியாதையை பற்றி பேசும் எம்பி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தானும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சமூகம் தான் என சாதியை வைத்து வாக்கு கேட்ட இவர் வெற்றி பெற்ற பின் தான் திராவிடன் என்றும், மேலும் சாதி பெயரை ஒழிக்க போவதாகவும், சாதியை கூறிக் கொண்டு தொகுதி மக்கள் தன்னை பார்க்க வரக் கூடாது என்றும் கூறியுள்ளார். தான் வெற்றி பெற சாதியை பயன்படுத்தலாம் ஆனால் தொகுதி மக்கள் அந்த சாதி பெயரை பயன்படுத்தி கொண்டு தன்னை பார்க்க வரக் கூடாது என்பது தான் சுய மரியாதையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

0

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேல் காரணம் அல்ல, பிரதமர் மோடியே காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது

சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழக கோவில்களின் சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘பொன்.மாணிக்கவேல் முயற்சியால் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது பிரதமர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

அரசு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் குறித்த வழக்கு வரும் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், இந்த வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கஷ்டப்பட்டு சிலையை பொன் மாணிக்கவேல் மீட்டு கொண்டு வந்த நிலையில் இந்த மீட்புக்கு அவர் காரணம் இல்லை என்று அரசுத்தரப்பே கூறியுள்ளது அவரது தரப்பினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

0

உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த இரண்டு வழக்கு: திருப்பம் ஏற்படுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க அளவிற்கு தனி மெஜாரிட்டி இல்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமைக்க அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி செய்தன

முதல் கட்டமாக பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து சிவசேனா கட்சி தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை

இந்த நிலையில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் தனித்தனியாக அழைப்பு விடுத்தார். மூன்று கட்சிகளுக்கும் கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு அம்மாநில ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்க மறுத்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசேனா நிர்வாகிகள் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என உச்சநீதிமன்ற பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்

இதுமட்டுமன்றி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சிவசேனா மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கும் நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வழங்கும் உத்தரவால் மகாராஷ்டிர மாநிலத்தில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது