Sunday, November 17, 2024
Home Blog Page 5093

மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!

0

மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவை சேர்ந்த நடிகை சரிதா நாயர் என்பவர் காற்றாலை மோசடி வழக்கில் சிக்கி இருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்த நிலையில் சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சரிதா நாயர் கோவையில் வைத்திருந்த நிறுவனம் ஒன்று சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கோவை ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயர் உள்பட மூவரும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற நிறுவனம் அமைத்து காற்றாலை அமைத்துத் தருவதாக மோசடி செய்ததற்காக இந்த தண்டனை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது

கடந்த 2011 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி அவர்கள் கேரளாவின் முதல்வராக இருந்த போது சோலார் பேனல் அமைத்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சரிதா நாயர் மீது லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரிதா நாயர் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர், வழக்கை திசை திருப்பும் நோக்கில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

0

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியே இதுபற்றிய தகவலைக் கண்டறிந்தவுடனேயே அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவைச் சேர்ந்த ‘லாசரசு’ எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு, ‘டிட்ராக்’ எனும் வைரஸ் மூலம் கூடங்குளம் அணுஉலைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக சில தனியார் சைபர் அமைப்புகளும் கூறியுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையக் கணினியிலிருந்து அணு உலைகள் குறித்த ரகசியத் தகவல்களை, ‘டிட்ராக்’ வைரஸை உருவாக்கியவருக்கு அனுப்பியுள்ளது.

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குறைந்த அளவு நீராவி உருவாக்கம் எனும் காரணத்தைச் சுட்டிக்காட்டி, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதற்குக்கூட இந்த ‘டிட்ராக்’ வைரஸ் தாக்குதல்தான் காரணம் என்று புக்ராஜ்சிங் மற்றும் சில தனியார் சைபர் நிபுணர்கள் ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் இதனை மறுத்து, கூடங்குளம் அணு உலை கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தும் தனித்துவமானது. அதனை வெளியிலிருந்து எவரும் ஹேக் செய்யவோ, சைபர் தாக்குதல் நடத்தவோ முடியாது” என்று விளக்கம் அளித்தது.

ஆனால் நேற்று அக்டோபர் 30 ஆம் தேதி பிற்பகல், இந்திய அணு மின்சக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், கூடங்குளம் அணு உலை இணையதளம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவின் தென் கோடி மாநிலமான, தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் உலைகளால் அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி, தென் மாவட்ட மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், அண்டை நாடுகளின் ராணுவ இலக்காக ஆகக் கூடிய அபாயம் கூடங்குளம் அணு உலைக்கு இருக்கிறது என்றும் பல ஆண்டுகளாக நான் சுட்டிக்காட்டி வருகின்றேன்.

ஆனால் மத்திய – மாநில அரசுகள் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல், மிகுந்த அலட்சியப் போக்குடன் இருப்பது மட்டுமல்ல, அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திலேயே சேமித்து வைக்கவும் திட்டமிடுவது தென் தமிழக மக்களின் மீது நெருப்பை அள்ளி வீசுவதற்கு ஒப்பாகும்.

தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்திலிருந்து அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது மிகுந்த கவலை தருகிறது.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

0

அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சரும், அதிகாரிகளும், இதில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஃபோக்டா’ அரசு மருத்துவர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை வைத்து கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வடிவிலான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு தவிர மற்ற பணிகளைப் புறக்கணித்து நடைபெறும் இந்த வேலைநிறுத்தம் இன்று 7-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தின் ஒரு கட்டமாக உண்ணாவிரதத்திலும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது

அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் – அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் & நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கொடுங்கோன்மை!

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும்!  என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

#DoctorsProtest

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

0

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

தமிழக மக்களின நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாடு தினம் கொண்டாட படுவதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தமிழ்நாடு நாள்: தமிழகம் இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும்!
என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, நாளை அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியா விடுதலையடைந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது 9 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன. எனினும், பின்னர் நாடு முழுவதும் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலப்பரப்பு பின்னர் 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் தேதியை, தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வரும் நிலையில், தமிழகமும் நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது. பிற தமிழ் அமைப்புகளும் இதுதொடர்பாக விடுத்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தார். அதன்படி, நவம்பர் ஒன்றாம் தேதியான நாளை, அரசு சார்பில் தமிழ்நாடு நாளாக அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளை தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாட வேண்டும்.

அதேநேரத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதுடன் மட்டுமே கடமை முடிந்து விட்டதாக அரசும், மக்களும் கருதிவிடக் கூடாது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகம் இரு வகைகளில் பாதிக்கப்பட்டது. முதலாவது சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் பிற மாநிலங்களுடன் சேர்க்கப்பட்டன; இரண்டாவது பிற மாநிலங்களில் உள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படவில்லை. இதுபோன்று தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும் போக்க தமிழ்நாடு நாளில் தமிழக அரசு உறுதியேற்க வேண்டும்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது.இதில் பாதி, அதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம். தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் அங்கமாக விளங்கிய 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்களும், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடியதன் பயனாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திரத்தின் ஓர் அங்கமாகவே இருந்துவருகின்றன. திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட இப்பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள் என்ற போதிலும், இவர்களால் அரசியல் உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட எந்த உரிமைகளையும் வென்றெடுக்க முடியவில்லை. பாலாறு சிக்கல், செம்மரக்கடத்தல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஆகியவற்றுக்கும் தமிழர் பகுதிகள் ஆந்திராவில் இணைக்கப்பட்டதே காரணமாகும்.

அதேபோல், முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னனின் ஆளுகைக்குள் இருந்து பின்னாளில், திரிக்கப்பட்ட வரலாற்றின்படி, திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு மாற்றப்பட்ட தேவிகுளம், பீர்மேடு ஆகியவை தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் ஆகும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, இப்பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படாதது தான் முல்லைப் பெரியாறு விவகாரம் சிக்கலானதற்கு காரணம் ஆகும். இடுக்கி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட அந்த பகுதிகளில் வாழும் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதற்கும் இதுதான் காரணம் ஆகும்.

தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கு தேவையான அரசியல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளான ஜனவரி 14-ஆம் தேதியையும் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும்.

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது?

0

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது?

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சில நாட்களில் அவர் உயிர் இழந்தார்

நிர்பயாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மாணவர்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேர் கைது செய்யப்பட்டனர்

இவர்கள் அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் ராம்சிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பின் விடுதலையானார். இதனை அடுத்து மீதி உள்ள முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாக்குர், பவன் குப்தா ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து இந்த நால்வருக்கும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் குற்றவாளிகள் நால்வரையும் விரைவில் தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்

குடியரசுத் தலைவருக்கு கருணை மனு விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே காலக் கெடு உள்ளது. இந்தக் காலக்கெடுவுக்கு முன் நான்கு பேர்களும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை விண்ணப்பம் செய்யாவிட்டால் அடுத்த ஒரு சில நாட்களில் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்

ஒருவேளை குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி, தங்கள் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று அவர்கள் மனு விண்ணப்பித்தால் மட்டுமே தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் மிரட்டலால் பணிந்த மருத்துவர்கள்! பணிக்கு திரும்பி வருவதாக தகவல்

0

அரசின் மிரட்டலால் பணிந்த மருத்துவர்கள்! பணிக்கு திரும்பி வருவதாக தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதிகள் இருப்பதால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிரமாக உள்ளது

இந்த நிலையில் நேற்று மாலை அரசு மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தம் தொடரும் என மருத்துவர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ’மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தவறு என்றும் ஒரு சில சங்க உறுப்பினர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்டாலும் ஒருசில சங்கத்தினர் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பிரேக் இன் சர்க்கிஸ் முறையில் பணிக்கு வராத மருத்துவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்கள் நியமனம் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்

அதேபோல் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ’மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவ்வாறு திரும்பாத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் மிரட்டலை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 4683 மருத்துவர்களில் ஆயிரத்து 1550 பேர் இன்று பணிக்கு திரும்பி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சற்றுமுன் அளித்த பேட்டியில் ’போராட்டம் செய்தவர்களை தண்டிப்பது அரசின் நோக்கமல்ல என்றும் அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருவதாகவும் அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பிய 1550 பேருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்

மேலும் நோயாளிகளின் நலன் கருதி பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தோம் என்றும் நேற்று 4683 மருத்துவர்கள் பணிக்கு வராத நிலையில் இன்று 3177 மருத்துவர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை என்றும் அவர்களும் இன்று மாலை அல்லது இரவு பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

இந்த நிலையில் மருத்துவர்கள் போராட்டம் அனேகமாக இன்று இரவு அல்லது நாளைக்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உலகின் கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனின் 216 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

0

உலகின் கடைசி தமிழ் மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியனின் 216 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

முல்லைத்தீவு முதல் வற்றாப்பளை அம்மன் கோவில் வரை இருந்த சுமார் 2000 சதுர மைல் பரப்பளவை கட்டி ஆண்ட தமிழினத்தின் கடைசி மன்னன் தான் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.

1621 ல் இலங்கை முழுவதும் கைப்பற்றிய போர்ச்சுகீசியர்களால் வன்னிப்பகுதியை மட்டும் கைப்பற்றவே முடியவில்லை. அடுத்து வந்த டச்சுக்காரர்களாலும் வன்னிய பகுதியை நெருங்க கூட முடிவில்லை . அன்னியர்க்கு கட்டுப்படாமல் தொடர்ந்து தனித்து சுதந்திரமாக இயங்கியதாலேயே வன்னிப் பகுதியை ” அடங்காப் பற்று ” என்று அழைத்தனர். இந்த மன்னர்கள் சோழர்களின் வழி வந்தவர்கள் என்பது ” யாழ்ப்பாண வைபவ மாலை ” என்ற நூல் மூலம் அறிய முடிகிறது…

1782ல் வன்னி பகுதியில் படையெடுத்த டச்சு படைதளபதி லூயி என்பவர் டச்சுப்படைகள் உலகம் முழுவதும் போரிட்டிருக்கிறது ஆனால் பண்டார வன்னியன் படை போன்று ஒரு படையைப் பார்த்ததில்லை என புகழ்ந்து கூறியுள்ளார்.

உலகத்தின் மிகப்பெரிய படையான பிரிட்டன் படைகளுக்கு சற்றும் தலை வணங்காமல் நேருக்கு நேர் மோதினார். ஈழ வரலாற்றில் ஆங்கிலேயர்களை நடுநடுங்க வைத்த நாள் 1803 ஆகஸ்டு 25 ஆம் அன்று தான் முல்லைத்தீவு படைதளத்தை தாக்கி ஆங்கில படைகளை நிர்மூலம் ஆக்கியதோடு 2 பீரங்கிகளையும் கைப்பற்றினார். அதன் பின்னர் வழக்கம் போல சூழ்ச்சி செய்து துரோகத்தின் துணைக்கொண்டு ஆங்கிலேயர்கள் இவரை வீழ்த்தினர்.

கவிசக்கரவர்த்தி கம்பன் எழுதிய சிலை எழுபது நூலில் குறிப்பிட்டுள்ளவாறு ” வன்னியர் ஏந்திய வில்லே வில் ” என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். உலகிலேயே எதிர்த்து போராடிய ஒரு வீரனுக்கு எதிரிகளால் நடுகல் வணக்கமும் , சிலையும் வைக்கப்பட்டது என்றால் அது இந்த பண்டார வன்னியனுக்கு மட்டும் தான்….

உலகையே மிரட்டிய ஆங்கிலேயர்களே வியந்து பார்த்து நடுக்கல் வணக்கம் செலுத்திய இலங்கையை ஆண்ட சோழர் படையின் கடைசி மாமன்னனான இந்த பண்டார வன்னியனின் வரலாற்றை சுட்டி காட்டியே இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்தான் என்று ஆணித்தரமாக உலகிற்கு ஆதாரத்தோடு நிறுவப்பட்டது.

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவன் மேதகு பிரபாகரனின் கனவு நாயகன் இந்த பண்டார வன்னியன்தான். அவரது போர் முறைகளை தான் விடுதலைப்புலிகள் கையில் எடுத்து போராடினர் குறிப்பாக கொரில்லா போர் முறையை இவரிடம் இருந்தே கற்றனர்.

அதனால் தான் விடுதலைப்புலிகள் தலைவன் மேதகு பிரபாகரன் கூட முள்ளிவாய்க்கால் போரின் இறுதி கட்டத்தில் ” வெற்றியோ தோல்வியோ நாம் விட்டுச் செல்லும் வாள் கூர்மையானதாக இருக்க வேண்டும். அன்று பண்டார வன்னியன் விட்டுச் சென்ற பணியைத் தான் நாம் கையில் எடுத்தோம் . நமக்கு பின்னாலும் இது தொடர வேண்டும் ” அதுவே நம் பணி என்று கூறினார்.

பண்டார வன்னியன் அவர்கள் பயன்படுத்திய கொடி

விடுதலைப் புலிகளை அழித்த பின் இலங்கை ராணுவம் செய்த முக்கிய செயல் சில நூற்றாண்டுக்கு முன் மரணமடைந்த மாவீரன் பண்டார வன்னியனின் நடுகல்லையும் , சிலையையும் வெறி கொண்டு உடைத்தார்கள் என்றால் இன்றும் எதிரிகள் தமிழினத்தின் அடையாளமாய் பண்டார வன்னியனைத் தான் பார்க்கிறார்கள் என்பதை உணர முடிகிறது…

திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

0

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் திடீரென விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்கள் செல்ல வேண்டிய காரணத்தினால் அந்த பொதுக்குழு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது நவம்பர் 10ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், இந்த பொதுக்குழு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நவம்பர் 10ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளும் திமுக கூட்டணியின் வசம் இருந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகள் தற்போது அதிமுக கைப்பற்றியுள்ளது

கடந்த மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக கூட்டணி, ஒருசில மாத இடைவெளியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது எப்படி? என்பது குறித்து இந்த பொதுக்குழுவில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது

மேலும் இந்த இரு தொகுதிகளில் இடைத்தேர்தலில் திமுக நிர்வாகிகள் சிலர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றுக், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இந்த பொதுக்குழுவில் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது

அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளும் இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

பட்டேல் 144-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு

0

பட்டேல் 144-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு

இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பெயர் பெற்ற சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 144வது பிறந்த நாள் விழா இன்று குஜராத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஒருமைப்பாட்டு தினம் உறுதிமொழியை ஏற்று அதன் பின் ஆவேசமாக பேசினார்.

அவர் இந்த விழாவில் பேசியபோது ’இந்தியர்களைப் பிரித்து ஒற்றுமையை கேள்விக்குறியாக்க நினைத்தவர்கள் வெல்ல முடியாமல் போனார்கள் என்று கூறிய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தை வல்லபாய் படேலுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்

மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கி முன்னேறி செல்வதாகவும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பெருமிதம் என்றும் அவர் கூறினார். பட்டேல் அவர்களின் கனவு காஷ்மீரின் 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பது தான் என்றும், அவருடைய கனவு தற்போது நனவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, 370 ஆவது பிரிவு, பிரிவினைவாதம் பயங்கரவாதம் ஆகியவற்றுக்குத்தான் உதவியது என்றும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் 40,000 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

ஜம்மு காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் இன்று முதல் அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆகின்றது என்றும், இரண்டுக்கும் தனித்தனி துணை ஆளுநர்கள் பணிபுரிவார்கள் என்றும் கூறிய பிரதமர், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் வழக்கம் போல் செயல்படும் என்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது என்றும், அந்த யூனியன் பிரதேசம் நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் என்றும் தெரிவித்தார். இனி இந்த இரு யூனியன் பிரதேசங்களிலும் எந்தவித தீவிரவாதத்திற்கும் இடம் இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக குஜராத் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரபிக்கடலில் இரண்டு புயல்கள்: கனமழை எச்சரிக்கை

0

அரபிக்கடலில் இரண்டு புயல்கள்: கனமழை எச்சரிக்கை

அரபிக்கடலில் ஏற்கனவே கியார் என்ற புயல் உருவாகி கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தற்போது புதியதாக மகா என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த இரண்டு புயல்கள் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

கியார் மற்றும் மகா புயல்களால் தமிழகத்திற்கு நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது என்றாலும் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக குமரி, நெல்லை, தஞ்சை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புதுவையிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று அதிகாலை நிலவரப்படி மகா புயல் திருவனந்தபுரத்திலிருந்து வடமேற்கில் 440 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும், இந்த புயல் லட்சத்தீவு பகுதியை கடந்து மத்திய அரசு கடல் பகுதிக்கு செல்லும் என்று கணிக்கப்பட்ட உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது இரண்டு புயல்கள் உருவாகியுள்ளதால் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து தமிழக, கேரள அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு குமரி மாவட்ட மற்றும் கேரள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது