கியார் புயலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை தீவிரப்படுத்தியுள்ளது
“கியார்” புயலின் காரணமாக சிக்கிக் கொண்ட மீனவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 25 மீனவர்கள் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டதுடன், 2740 மீன்பிடி படகுகளையும், மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துள்ளது.
2019 அக்டோபர் 18-ந் தேதி முதற்கொண்டே, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும், மீனவர்களுக்கும் இந்தியக் கடலோரக் காவல் படை வானிலை முன்னெச்சரிக்கைகளை வழங்கியதுடன், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்கு சென்றவர்களையும் பத்திரமாக திரும்புமாறும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல்கள், விமானங்கள், கடல்சார் மீட்பு ஒத்துழைப்பு மையம் மற்றும் இணையதள விளம்பர நிறுவனங்கள் மூலமாக அனைத்து மாலுமிகளுக்கும், அந்தந்த மாநில மொழி பத்திரிகைகளில் புயல் குறித்த செய்தி வெளியிடப்பட்டதுடன், துறைமுகங்களுக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. மீனவர் சங்கங்கள் / அமைப்புகள், கடலோரக் காவல் படை, கடலோர ரோந்து காவல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட பிற அமைப்பினரின் நெருங்கிய ஒத்துழைப்புடன், நடுக்கடலில் சிக்கியுள்ள மீன்பிடி படகுகளை கணக்கிட்டு அவற்றை பத்திரமாக கரை திரும்ப செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
மீன்பிடி படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில், இந்தியக் கடலோரக் காவல் படையின் 9 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன் புயல் பாதிப்புப் பகுதியில் சிக்கித் தவித்த மீனவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்பட்டன. இந்தியக் கடலோரக் காவல் படையின் 2 டார்னியர் ரக விமானங்களும், நடுக்கடலில் சிக்கித் தவித்த மீன்பிடி படகுகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இது தவிர ஹெலோ ஹெலிகாப்டர் ஒன்றும் மீன்பிடி படகுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்தியக் கடலோரக் காவல் படையின் பல்வேறு பிரிவுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, புயலில் சிக்கித் தவித்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2740 படகுகள் பத்திரமாக கொண்டு வரப்பட்டன. வெராவெல் பகுதியில் 2 மீன்பிடி படகுகள், இந்தியக் கடலோரக் காவல் படையின் சமுத்ரா பிரஹாரா கப்பல் மூலம் கோவாவிற்கு பத்திரமாக கொண்டு வரப்பட்டன. பிபாவவ் பகுதியிலிருந்து 1676 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன. குஜராத்தின் 500 படகுகள், கேரளாவின் 80 படகுகள், கர்நாடகாவில் 2 படகுகளும், மகாராஷ்டிராவின் ரஜாபுரியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. இது தவிர ஜெய்கரில் 130 படகுகள் தஞ்சமடைந்தன. மும்பையில் 7 படகுகளும், சிந்துதுர்கில் சுமார் 600 மீன்பிடி படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. பிற மாநிலங்களைச் சேர்ந்த 197 படகுகள் ரத்தினகிரியில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80 படகுகள் கோவாவில் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவின் கார்வாரில் 500 மீன்பிடி படகுகளும். உடுப்பில் 120 படகுகளும், மங்களூரில் 50 படகுகளும், மால்பேயில் 20 படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
மாயமான / கடலில் சிக்கித் தவிக்கும் 14 மீன்பிடி படகுகளை தேடி மீட்டு வரும் பணியில், இந்தியக் கடலோரக் காவல் படை, மீனவர் அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரின் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகிறது.
Source: PIB