விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக வன்னியர்களை கவனிக்கும் திமுகவின் அரசியல் நாடகம்
அடுத்த மாதம் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் நேரடியாக மோத உள்ளதால் அப்பகுதிகளில் அரசியல் களம் விறுவிறுப்பாகி வருகிறது. இந்நிலையில், இதுவரை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்த வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த திமுகவினருக்கு முக்கியத்தும் அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில், 7 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவும், 4 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் திமுக அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் கட்சியில் நிலவும் உட்கட்சி கோஷ்டி பூசல் காரணமாக தலைமை கலக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் திமுகவில் பொன்முடி சார்ந்த உடையார் சமூகத்தினருக்கே தொடர்ந்து கட்சி பொறுப்புகளை வழங்கி வருவதும்,வன்னியர் மக்களை அதிகமாக கொண்ட இந்த தொகுதிகளில் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதும் தான் என்று கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த காலத்தில் திமுகவில் அசைக்க முடியாத மாவட்ட செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் வலம் வந்தார். அதன்பிறகு, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் மகனான முகையூர் சம்பத் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இறுதியில், அமைச்சராக இருந்த பொன்முடியிடம், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் திமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிக அளவில் நியமிக்கபட்டனர். அப்போது, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரான பொன்முடியும், வடக்கு மாவட்ட செயலாளராக செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான், தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ வான அங்கையற்கன்னியும் தேர்வு செய்யப்பட்டனர். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் பொன்முடியை எதிர்த்து வேறு யாரும் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடவில்லை. தமிழக அளவில் திமுகவில் இவ்வளவு பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்தாலும் இங்கு எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த புஷ்பராஜ் எந்த பதவியும் இன்றி தொடர்ந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் நகரமன்ற சேர்மனாக இரண்டு முறையும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி வகித்து, தற்போது தலைமை தீர்மானக்குழு உறுப்பினராக உள்ளவரான முன்னாள் சேர்மன் ஜனகராஜ் திமுகவில் தீவிர கட்சி பணியாற்றியும் இவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால், இவரும் கட்சி செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார். இதே போல ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலாளர் பதவி வகித்து, தற்போது மாவட்ட பொருளாளராக உள்ள புகழேந்திக்கும், தேர்தலில் போட்டியிட 3 முறை சீட் கேட்டும் வழங்கவில்லை என்ற அதிருப்தியும் நிலவி வருகிறது. இதனை சரிகட்டும் விதமாக இவருக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கட்சியில் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தான் கேட்கும் போதெல்லாம் சீட் கொடுக்காமல் இன்னும் 15 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க கூடிய இந்த இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கியதை புகழேந்தியும் விரும்பவில்லை என்றே கூறுகிறார்கள்.
இந்நிலையில், ஒரு காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திமுகவின் கோட்டையாக கருதப்பட்டாலும் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கால் தற்போது திமுக படு மோசமான நிலையில் உள்ளது. பொன்முடியின் வன்னியர் எதிர்ப்பு அரசியல் மற்றும் உட்கட்சி கோஷ்டி பூசல் காரணமாகவும் திமுக கடுமையான சோதனைக்கு தயாராகி வருகிறது. மேலும் இப்பகுதியில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் மாவட்ட செயலாளருடன் கருத்து வேறுபாடு கொண்டு செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக முன்னாள் எம்எல்ஏக்கள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு, நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் செஞ்சி, திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் வன்னியர்களின் ஓட்டு வங்கி உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. பலமுறை இங்கு திமுகவை வெற்றி பெறச் செய்தும் வன்னியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. இதற்கு பொன்முடியின் தலையீடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் வன்னியர்களின் வாக்கு அவசியம் என்பதை உணர்ந்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் திமுக தலைமை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகளை வழங்கி சரிகட்ட திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு நாட்களாக திமுகவில் புறக்கணிக்கப்பட்டு வந்த வன்னியர்களுக்கு இந்த இடை த்தேர்தலால் பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் இடைத்தேர்தலுக்காக திமுக நடத்தும் அரசியல் நாடகம் என்றும் பொது மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.