காவல் துறையை காக்குமா தமிழக அரசு! பதவி விலக்கப்படுவாரா ஆட்சியர்?
காவல்துறை உங்கள் நண்பன் என்று மக்களுக்கு கொடுக்கப்பட்ட விழிப்புணர்வு மேல் அதிகாரிகளின் ஆளுகைக்கு தலையசைப்பது என்று அர்த்தமல்ல.
இன்றைய நிலையில் இரவு பகல் பாராமல் ஏராளமான இளைஞர்கள் மக்களை பாதுகாக்கவும் சேவை செய்யவும் தங்களை காவல் துறை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை அரசியல்வாதிக்கோ ஆதிக்க வாதிகளுக்கோ சாதகமல்ல என்றும் மக்களுக்கான ஒன்றே என பல்வேறு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், திருச்சி மயில்வாகனன் போன்றவர்கள் நிரூபித்து வந்துள்ளனர்.
இப்படி போலீஸ் என்றால் ஒரு உயர்ந்த நிலையில் மதிக்கப்படும் போது காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடைபெற்ற சம்பவம் மக்கள் மனதில் ஒருவித குற்ற உணர்ச்சியே ஏற்பட்டுள்ளது.
காஞ்சி அத்தி வரதர் கோவிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் துறை அதிகாரியை காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அவர்கள் காஞ்சி அத்திவரதர் கோவில் முன்பு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய காட்சி அனைத்து ஊடகங்களிலும் வைரலாகி வந்தது.
அந்த அதிகாரி ஏதேனும் தவறு செய்து இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரை செய்யலாம். அதை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய ஒரு ஆட்சியர் இப்படி காவல்துறை அதிகாரியை மிரட்டுவதும் தரக்குறைவாக பேசுவதும் மிகவும் ஆளுமை திறன் அல்லாததை குறிக்கிறது.
இதனால் காவல்துறை தான் உயிரென போட்டி போட்டு படிக்கும் இளைஞர்கள் மத்தியில் இப்படியொரு அடிமைத்தனமா காவல்துறை என கேள்வி எழுந்துள்ளது. அது மட்டுமல்ல காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொருவர் குடும்பமும் வெட்கி தலை குனிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனால் பல்வேறு பட்ட அமைப்பினர், முன்னாள் மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்கும்படி எழுந்து வருகிறது.
மேலும் கீழ்மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளை தொடர்ந்து மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றது, ஏற்கனவே கீழ்மட்ட காவல்துறையில் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் காவலர்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது.
அவர்களது மன உளைச்சலுக்கு காரணமாக அமைவதாவது
- அவர்களுக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை வேலை செய்ய வைப்பது
- அவர்களின் சொந்தங்களின் கல்யாணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு கூட அவர்களுக்கு விடுப்பு வழங்காதது
- மேலதிகார்கள் தொடர்ந்து கீழதிகாரிகளை சட்ட விரோத வேலைகள் செய்ய அழுத்தம் கொடுப்பது
- காவல்துறையின் செயல்பாட்டில் அரசியல்வாதிகளின் தொடர் தலையீடு.
- காஞ்சி ஆட்சியர் பொன்னையா போன்று உயரதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் மிரட்டுவது.
- சில மேலதிகாரிகளின் சட்ட விரோத வேலைகளுக்கு அவர்கள் அடிபணியாத போது அவர்களை பணியிடம் மாற்றுவது
- மேலதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்துதல். போன்ற தவறுகளை களைய வேண்டும்.
காவல்துறை நம் சட்ட ஒழுங்கை காக்கவும் சட்டப்படி மக்களை நடக்க வைக்கவும் மிக அவசியமான ஒன்றாகும். அவர்களின் இந்த நிலையை மாற்ற காவல்துறை தன்னிச்சையாக இயங்குவது அவசியம். கடந்த சில மாதங்களாக கீழ்மட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் காவல்துறையில் மாற்றங்கள் கொண்டு வர எண்ணுகின்றனர்.
உச்சநீதி மன்றம் 2007 ல் பரிந்துரை செய்த காவல்துறை சீர்த்திருத்தங்களை நம் தமிழகம் பெரும்பாலும் நிறைவேற்றாமலே உள்ளது.
அதில் அரசியல் தலையீட்டை குறைப்பது, வெளிப்படைதன்மையுடன் கூடிய நியமனம், ஓரிடத்தில் குறைந்தபட்சமாக 2 வருட பணி, சட்ட ஒழுங்கையும் விசாரணைகளையும் பிரிப்பது, பணி மாற்றம், உயர்வுக்காக தனியாக காவல்துறை நிருவாக வாரியம் அமைத்தல், தன்னிச்சையாக இயங்கும் காவல்துறை புகார் மையம் என பல பரிந்துரைகள் உள்ளது. இவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினரின் கோரிக்கைகளாக:
- கீழ்மட்ட காவல்அதிகாரிகளுக்கான நீதியின் பக்கம் அரசு இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வரும் வகையில் காஞ்சி ஆட்சியர் பொன்னையாவை உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்
- உடனடியாக தமிழகத்தில் உச்சநீதி மன்ற பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்
- கீழ் மட்ட காவலதிகாரிகளுக்கு அவர்கள் மன உளைச்சலை குறைக்கும் வகையில் ஒரு நல்ல வேலை சூழல் ஏற்படுத்தி கொடுக்கப் பட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்